திராவிட கட்சிகளின் கோட்டையாக திகழும் தமிழ்நாட்டில் விஜய்யின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எத்தனை புது கட்சிகள் தோன்றினாலும், இருமுனை போட்டியாகவே தமிழ்நாட்டின் அரசியல் களம் இருந்து வருகிறது.
வைகோ, விஜயகாந்த் தொடங்கி தற்போது சீமான் வரை, அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அவர்களால் திராவிட கட்சிகளை வீழ்த்தி ஆட்சிக்கட்டிலில் அமர முடியவில்லை. விஜயகாந்தால் எதிர்க்கட்சி தலைவராக முடிந்தாலும் அது அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் சாத்தியமானது.
விஜய்யின் அரசியல் ஆலோசகர் யார்?
ஆனால், அதன்பின், அவர் தொடர் சரிவையே சந்திதார். இப்படியிருக்க, விஜய்யின் தவெகாவால் என்ன தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும், பெரும் சவால்களுக்கு மத்தியில் கட்சியின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காண்பித்துள்ளார் விஜய்.
கட்சியின் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கொள்கைகளும், விஜய்யின் உரையும் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. அரசியல்வாதி போலும் அல்லாமல் சினிமா நடிகர் போலும் அல்லாமல் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் பேசியிருந்தார்.
விஜய் மாநாட்டின் வெற்றிக்கும் அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு பின்னணியிலும் இருப்பவர் யார் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. அவர் யார் என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
அவரின் பெயர் ஜான் ஆரோக்கியசாமி. இந்தியாவில் தேர்தல் வியூக ஆலோசகர் என்றாலே மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் பிரசாந்த் கிஷோர்தான். அதற்கு அடுத்தபடியாக, சுனில் கனுகோலு பரிச்சயமானவராக உள்ளார். ஆனால், இருவரும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
அந்த வகையில், ஜான் ஆரோக்கியசாமி தமிழ்நாட்டை சேர்ந்தவர். திருச்சியை பூர்விகமாகக் கொண்ட அவர், வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருந்துள்ளார். இப்போது 'பெர்சனா டிஜிட்' என்ற மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஆப்பிள் நிறுவனம் தொடங்கி ஐக்கிய நாடுகள் சபை வரை முக்கிய பதவிகளில் இருந்துள்ளார் ஜான் ஆரோக்கியசாமி. கடந்த 2016ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 'மாற்றம், முன்னேற்றம் அன்புமணி' என்ற பிரச்சாரத்தின் மூலம் மாநிலத்தின் பட்டிதொட்டி எல்லாம் பாமகவின் அன்புமணி ராமதாஸை கொண்டு சேர்த்தவர் ஜான் ஆரோக்கியசாமிதான்.
தேசிய அளவில் சரத் பவாரி, சித்தராமையா உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆலோசகராகச் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.