வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 80 தொகுதிகள், அதோடு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற ஃபார்முலாவுடன் துணை முதலமைச்சர் பதவியை விஜய் தரப்பில் கேட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


அதிமுகவுடன் டீல் பேசும் தவெக விஜய்?


விஜய்யின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. கட்சியின் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கொள்கைகளும், விஜய்யின் உரையும் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. 


திமுக, பாஜக எதிர்ப்பை நேரடியாக கையில் எடுத்துள்ள விஜய், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக குறித்து இதுவரை ஒரு விமர்சனம் கூட வைக்கவில்லை. அதோடு, பாமக, விசிக, காங்கிரஸ் மீதும் விமர்சனம் வைக்காமல் தவிர்த்து வருகிறார்.


இது, கூட்டணிக்கான அச்சாரமா என கேள்விகள் எழுந்து வருகின்றன. பலமான திமுகவை எதிர்க்க வேண்டுமானால், கட்சி கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டும். அதோடு, சரியான கூட்டணி அமைய வேண்டும். அந்த வகையில், திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் அதிமுக, தவெக கட்சிகள் இணைந்து போட்டியிட இரு தரப்பும் விரும்புவதாக பேசப்படுகிறது.


தமிழக அரசியலை புரட்டி போடும் கூட்டணி:


இந்த நிலையில்தான், 80:154 என்ற ஃபார்முலாவை விஜய் தரப்பு முன்மொழிந்து வருவதாக தவெகவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது, அதிமுக கூட்டணியில் 80 தொகுதிகளை விஜய் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.


மீதமுள்ள 154 தொகுதிகளில் அதிமுகவை போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஃபார்முலாவை அதிமுக தரப்பு ஏற்று கொள்ளுமா என தெரியவில்லை. ஏன் என்றால், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 118 இடங்களில் வென்றால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்.


154 தொகுதிகளில் போட்டியிட்டு 118 இடங்களில் வெற்று பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிமுக, தவெகவை தவிர்த்து சிறிய கட்சிகள், கூட்டணியில் இணைந்தால் அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும்.


எனவே, விஜய் தரப்பு முன்மொழியும் ஃபார்முலாவை அதிமுக ஏற்று கொள்ளுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சமீபத்தில், ஆந்திராவில் பவன் கல்யாணுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடித்தார். அதேபோல், தமிழ்நாட்டில் நடக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.