தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளிடம் 1 லட்ச ரூபாய் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் ப்ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
விஜய் - இப்தார் நிகழ்ச்சி:
சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், தவெக தலைவரும் நடிகருமான விஜய் தலைமையில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், இஸ்லாமிய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தலையில் குல்லாவுடன் லுங்கி அணிந்து வந்தார் விஜய். இந்நிகழ்ச்சியில் கட்சியினர் உட்பட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களுடன் இணைந்து உணவருந்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தவெகவினரும் விஜய் வருவதை அறிந்து , ஒய்எம்சிஏ மைதானத்தின் கண்ணாடியை உடைத்து பலர் உள்ளே நுழைந்தனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதை மீறியும் பலர் ஒய்எம்சிஏ மைதானத்தில் நுழைந்தனர்.

3 பேரிடம் பிக் பாக்கெட்:
அப்போது, இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் உட்பட 3 பேரிடம் 1 லட்ச ரூபாய்க்கு மேல் பிக்பாக்கெட் அடித்து சென்றதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக வியாசர்பாடி எருக்கஞ்சேரி எஸ்.ஏ நகரை சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சி வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முகமது இஸ்மாயில் என்பவரிடம் இருந்து 42 ஆயிரம் ரூபாயும், மண்ணடியை சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சி துறைமுகம் பகுதி கிளை செயலாளர் அப்துல் அபுதாகீர் என்பவரிடம் இருந்து 63 ஆயிரம் ரூபாய் மற்றும் மற்றொரு நபரிடம் 20 ஆயிரம் ரூபாய் என மூன்று பேரிடம் பிக்பாக்கெட் அடித்து சென்றிருக்கின்றனர்
காவல்துறையினர் தீவிர விசாரணை:
மூவரும் நிகழ்ச்சி முடிந்து பார்த்த போது, பணம் திருடு போனது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் இருவரும், இது குறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இறைவழிபாடு கொண்ட நிகழ்ச்சியில், சிலர் அதை தவறாக பயன்படுத்தி பணம் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன.
Also Read: Vijay: இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய்.! டாப் 10 புகைப்படங்கள்.!