TVK Vijay: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில், என்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டம்:
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி ஓராண்டு முடிவடைந்த நிலையில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விஜய் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதோடு, மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகளை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து, தமிழக அரசியலில் தனக்கான இடத்தை வலுவாக பிடிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறார். கட்சியின் முதல் மாநாடு கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் நடந்த நிலையில், இரண்டாமாண்டு தொடக்க விழா எளிமையாக அண்மையில் சென்னையில் நடந்தது. இந்நிலையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
பொதுக்குழு கூட்டம் எங்கு? எப்போது?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் பொதுக்குழுவில் கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் வியூக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர். தவெகவில் இருந்து 2,150 பேர் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் அனைவரும் காலை 7.30 மணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூத் கமிட்டி மாநாடு எப்போது?
கூட்டத்தின் முடிவில் 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மாநிலம் முழுவதும் விஜய் பயணம் மேற்கொள்வது குறித்தும், கட்சியின் பூத் கமிட்டி மாநாடு எங்கு? எப்போது? நடைபெறும் என்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாமாண்டு தொடக்க நிகழ்ச்சியில் பேசிய விஜய் பூத் கமிட்டியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக ஒரு கட்சிக்கு 69 பூத் கமிட்டி தேவையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தீர்மானங்கள் என்ன?
சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இந்தி திணிப்பு விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு, அரசு ஊழியர்கள் போராட்டம் மற்றும் பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், மாநிலம் முழுவதும் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, பொதுமக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் இறங்கி போராடுவது போன்ற களப்பணிகளிலும் தவெக தீவிரம் காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தவெகவின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்தும், தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு ஏற்பாடு?
பொதுக்குழுவிற்கான பணிகளை மேற்கொள்ள வரவேற்பு, மேலாண்மை, தொழில்நுட்ப குழு உள்ளிட்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ள பொதுக்குழுவில், பங்கேற்கும் நிர்வாகிகளுக்காக தலை வாழை இலையில் விருந்தளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.