தவெக மாநாட்டுக்கு வந்துள்ள விஜய்யை பார்த்து தொண்டர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். கட்சித் துண்டுகளை விஜய்யை நோக்கி வீசி வருகின்றனர். தொண்டர்கள் வீசும் துண்டுகளை, கழுத்தில் அணிந்து கொண்டு மாநாட்டு மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த Rampஇல் நடந்து சென்று, மேடையை அடைந்துள்ளார் விஜய்.
அதிர்ந்த தவெக மாநாட்டு மேடை:
தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, அதன் தலைவர் விஜய் கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார்.
விஜய்யின் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தொடங்கியது. அப்போது, கட்சி தொண்டர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த Rampஇல் விஜய் நடந்து சென்றார்.
கொள்கை பாடல் வெளியானது:
இருபுறமும் தொண்டர்கள் வீசிய கட்சி துண்டுகளை, கழுத்தில் அணிந்து கொண்டு மேடை நோக்கி விஜய் சென்றார். இதை தொடர்ந்து, மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கட்சியின் கொடியை தவெக தலைவர் விஜய் ஏற்றி வைத்தார்.
கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே தவெகவின் கொள்கை என்ன, கோட்பாடு என்ன என பல்வேறு தரப்பினர் தினம் தினம் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தனது கட்சியின் கொள்கை பாடல் மூலம் அதற்கு பதில் அளித்துள்ளார்.
மதச்சார்பற்ற சமூக நீதி என்பதே தனது கொள்கை என விஜய் அறிவித்திருக்கிறார். இந்த மாநாட்டில், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திமுகவை எதிர்க்கும் விதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு அரசியல் களத்தை பொறுத்தவரையில், ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை அரசியல் இருந்து வருகிறது.
இப்படியிருக்க, நடிகர் விஜயின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
இதையும் படிக்க: TVK Maanadu LIVE: கட்சி கொடியை ஏற்றினார் தவெக தலைவர் விஜய்; உற்சாகத்தில் தொண்டர்கள்.!