தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் அணிந்தும் தீபாவளி கொண்டாடப்படும். இந்த நன்னாளில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள்.


நாளை முதல் சிறப்பு பேருந்துகள்:


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வசிப்பவர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். சென்னை, திருச்சி, திருப்பூர், கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.


சொந்த ஊர்கள் செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுவது வழக்கம். தமிழக அரசு சார்பில் சுமார் 14 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது.


எத்தனை பேருந்துகள்?


சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அமைச்சர் சிவசங்கர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.  சென்னையில் இருந்து மட்டும் அரசு சார்பில் 11 ஆயிரத்து 176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 14 ஆயிரத்து 86 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நவம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக  9 ஆயிரத்து 441 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


சென்னையில் இருந்து வழக்கமாக தினசரி இயக்கப்படும் பேருந்துகளான 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் அடுத்து வரும் 3 நாட்களில் சிறப்பு பேருந்துகளாக மொத்தம் அடுத்த நாட்களுக்கு மட்டும் 11,176 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 2 ஆயிரத்து 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


லட்சக்கணக்கான பயணிகள் முன்பதிவு:


சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்காக கிளாம்பாக்கத்தில் 7 மையங்களும், கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்களும் இயங்கி வருகிறது. தமிழக அரசு பேருந்துகளில் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான பயணிகள் அடுத்த சில நாட்கள் வெளியூர்களுக்கு பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக சுமார் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளும் சென்னையை நோக்கி இயக்கப்பட உள்ளது. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் பயணிகளின் பாதுகாப்பிற்காக பேருந்து நிலையத்தில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.