நடிகர் விஜய் தென் இந்திய திரையுலகை தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே, தெரிந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். நடிகர் விஜய் ஒரு திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாகவும் ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.‌ தமிழ் திரையுலகின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் சூழலில் தான், அதனை விட்டு முழுவதுமாக விலகி தனது அரசியல் பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்


தமிழக வெற்றிக் கழகம் 


நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தவெக எனப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக்.27) விக்கிரவாண்டியில், வி.சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னெடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தவெகவின் முதல் மாநாட்டில் லட்சக் கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


அதிமுக மாநாடு உணவு சர்ச்சை 


மதுரை அருகே அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரிலான மாநாடு, நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்காக, மாநாட்டு பந்தலிலே மூன்று இடங்களில் பிரம்மாண்ட உணவுக் கூடங்கள் அமைத்து 10,000 தொழிலாளர்கள் உணவு சமைத்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


இந்த மாநாட்டில் பல டன் கணக்கில் உணவுகள் வீணான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த மாநாடு பிறகு உணவுகள் வீணானது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருந்தது. உணவு வீணான விவகாரம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


உஷாரான விஜய் 


தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், உணவு விஷயத்தில் எந்த விதத்திலும் சர்ச்சையில் சிக்கிவிடக்கூடாது என விஜய் கவனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 


இதன் காரணமாக உடனடியாக இதுகுறித்து மாவட்ட நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு தேவையான மதிய உணவை, அழைத்து வரும் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்து அவர்களுக்கு வழங்கி மாநாடு திடலுக்கு அழைத்து வர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.


ஹோட்டல்களில் குவிந்த ஆர்டர்கள் 


இதனால் விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்களில் உணவு ஆர்டர்கள் குவிந்துள்ளன. குறிப்பாக மாநாடு மாலை முதல் இரவு வரை மட்டுமே நடைபெற உள்ளதால், மாநாட்டிற்கு வரும் வழியில் உணவு கொடுத்து அழைத்து வருவது தான் சிறந்ததாக இருக்கும் என கட்சி தலைமை கருதியுள்ளது. 


மாநாட்டிற்கு அதிகளவு பொதுமக்கள் வரக்கூடாது என்பதற்காக, நுழைவு வாயில் வழியாக பொதுமக்கள் வருவதற்கான ஏற்பாடுகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டுக்கு வந்த பொதுமக்கள், அங்கிருந்து வெளியேறுவது சிரமமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே உணவு கொடுக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. 


தண்ணீர் ஜூஸ்..


மாநாட்டிற்கு வருபவர்களுக்கு மிக அடிப்படை தேவையான தண்ணீர் மற்றும் ஜூஸ், ஸ்னாக்ஸ் ஆகியவற்றை, 50க்கும் மேற்பட்ட இடங்களில் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை, செய்யப்பட்டுள்ளது. இதற்காக தன்னார்வலர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் பணியமத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாநாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கழிவறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது