தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திர நடிகர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்கியதுடன் நடிப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். விஜய்யின் அரசியல் வருகை அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், அவர் சினிமாவில் இருந்து விலகுவது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்தது.
த.வெ.க. முதல் மாநாடு:
கட்சியைத் தொடங்கிய பிறகு பெரியளவில் தமிழ்நாடு அரசியல் நடவடிக்கைகளில் பெரியளவில் ஈடுபடாமல் இருந்த விஜய், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் விஜய், தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த உள்ளதாக அறிவித்தது முதலே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது.
தல ரசிகன், தளபதி தொண்டன்:
சென்னை புறநகரில் இருந்து விக்கிரவாண்டி வரையிலும் பல இடங்களில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் விக்கிரவாண்டியில் விஜய்க்கு ஆதரவாக அஜித் ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள்தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் மற்றும் அஜித் இருவரும் வேட்டி சட்டையில் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய இந்த பேனரில் “தல ரசிகன், தளபதி தொண்டன்” என்ற வாசகத்துடன் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.
நடிகர் விஜய்க்கு திரைத்துறையில் சவால் அளிக்கும் ஒரே நடிகராக கருதப்படுபவர் நடிகர் அஜித். புகழ், ரசிகர்கள் கூட்டம் என இரண்டிலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சமமான அளவை கொண்டவர்கள். மேலும், விஜய் அரசியலில் வெற்றி பெற ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் ரசிகர்களின் ஆதரவு மிக மிக அவசியம் ஆகும். நடிகர் விஜய்க்கு பெரிய நடிகர்கள் யாரும் இதுவரை வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் பல நடிகர்களின் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, திரைப்பட வெளியீட்டில் மோதிக்கொள்ளும் விஜய் – அஜித் ரசிகர்கள் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்:
இதன் வெளிப்பாடாகவே விக்கிரவாண்டியில் அஜித் ரசிகர்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. விஜய், அஜித் இருவரும் இணைந்து இதுவரை ராஜாவின் பார்வையிலே என்ற படம் நடித்துள்ளனர். இதன்பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நேருக்கு நேர் படம் நடிக்க இருந்தது. ஆனால், சில காரணங்களால் அஜித் அந்த படத்தில் இருந்து விலகினார். அதன்பின்பு, இவர்கள் இருவரும் இணைந்து படம் நடிக்கவே இல்லை.
திரைத்துறையில் இருவரும் வளர்ந்து வந்த காலகட்டத்தில் ஒருவரது படங்களையும், வசனங்களையும் மாறி, மாறி விமர்சித்துக் கொள்ளும் வகையில் படங்களில் வசனமும், பாடல்களும் இடம்பெற்றிருந்தது. ஆனால், சமீபகாலமாக இருவரது திரைப்படங்களிலும் ஒருவரது படங்களை ஒருவர் காட்டி வருகின்றனர். அஜித் ரசிகர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பேனர்கள் வைத்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.