விழுப்புரம்:  தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தொண்டர்களுக்கு வழங்க 5 லட்சம் ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்யும் பணி தீவிரம்.


விஜய் மாநாட்டில் சுமார் 5 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டுக்கு வரும் அவர்களுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட், 50 கிராம் மிக்சர், ½ லிட்டர் தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இதற்காக அவற்றை மாநாடு நடைபெறும் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மொத்தமாக கொண்டு வரப்பட்டு அங்கு ஒரு பையில் போட்டு பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் தொண்டர்களுக்கு வழங்கியது போக மேலும் தேவைப்பட்டால் விழுப்புரம், புதுச்சேரியில் உள்ள கடைகளில் இருந்து பேக்கிங் செய்து வரவழைக்கவும் அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம்


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு


தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் 85 ஏக்கர் பரப்பளவில் நாளை நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான அனைத்து பணிகளும் முடிவு பெற்றது.


நடிகர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என ஒற்றை குறிக்கோளுடன் நகர்ந்து வருவதாக தெரிகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார்.


மாநாடு அமைப்பு : கம்பீரமாக நிற்கும் தலைவர்கள்


தவெக மாநாடு நுழைவாயிலில் தலைமை செயலகம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது, அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் மேடையின் இடது புறம் அருகே வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், காமராஜர், பெரியார் மற்றும் விஜய் இவர்களின் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது, வலதுபுறம் தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியர் மற்றும் விஜய் இவர்களின் 50அடி கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பெரும் தலைவர்கள் கட்அவுட் இடம்பெறும் முதல் மாநாடாக இந்த தமிழக வெற்றி கழக மாநாடு உள்ளது.


700 சிசிடிவி கேமராக்கள்


தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர். மேலும் மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக வாகனங்களை முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்துள்ளனர். இவர்கள் எடுத்து வரும் வாகனகள் பார்க்கிங் செய்ய ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களை தேர்வு செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.


இந்த நிலையில் மாநாட்டிற்கு இலட்சக் கணக்கானோர் வருவார்கள் என்பதால் சுமார் 700க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை அமைத்து மாநாட்டு நிகழ்வுகள் முழுவதையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மாநாட்டில் யாராவது தவறினால் அல்லது வேறு பகுதிக்கு சென்று விட்டால் அவர்களை கண்டுபிடித்து தரவும் காணாமல் போனவர்களை அணுகுவதற்கும் மிஸ்ஸிங் ஜோன் உதவி மையங்கள் Missing center மாநாட்டு திடல் பகுதிகளிலும், நான்கு பார்க்கிங் பகுதிகளிலும் அமைக்கப்படுகிறது.


150-க்கும் மேற்பட்ட மருத்துவமுகாம் 


மாநாட்டிற்கு வருபவர்கள் அனைவருக்கும் தேவையான கழிப்பிட வசதி, இருக்கைகளுக்கு அருகே தேவையான அளவுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மாநாட்டு திடல் மற்றும் பார்க்கிங் பகுதியில் அவசர மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள். மேலும்  மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் குழுவினர், கண்காணிப்பு குழுவினர், வரவேற்பு குழுவினர் என அனைவருக்கும் தனித் தனியாக ஒரே நிற சீருடை வழங்கப்பட்டு உள்ளது.


மாநாட்டிற்கு வந்த கேரவன்கள்


நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் சினிமா நடிகர்கள், நடிகைகளும் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் அழைப்பு கொடுக்காவிட்டாலும் அவர் என்ன பேசப்போகிறார் என்பதை அறிய  ஒரு பார்வையாளராக சென்று அம்மாநாட்டில் கலந்துகொள்வோம் என்று ஏற்கனவே நடிகர்கள் விஷால், ஜீவா அறிவித்திருந்தனர். எனவே இம்மாாநாட்டில் சினிமா பிரபலங்களும் பங்கேற்கக்கூடும் என தெரிகிறது. அவ்வாறு அவர்கள் வரும்பட்சத்தில் அவர்களின் வசதிக்காக மாநாட்டுக் குழுவினர், 6 கேரவன்களை கொண்டு வந்து தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளனர்.