நாளைய தினமானது தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய நாள் என்றே சொல்லலாம். ஏனென்றால், நாளைதான் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சி வந்ததில் இருந்து திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கட்சிகளே மாறி மாறி வெற்றி பெற்று ஆட்சியில் இருந்து வருகின்றன. இதர கட்சிகள் திமுக மற்றும் அதிமுகவோடு கூட்டணி அமைத்து அரசியலில் பயணித்து வருகின்றன.


அசைக்க முடியாத திமுக - அதிமுக:


இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக , பல கட்சிகள் தோன்றினாலும் அவர்களால் , அந்த பயணத்தில் வெற்றி அடைய முடியவில்லை. 2016 சட்டப்பேரவை தேர்தலில்கூட திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நல கூட்டணி உருவெடுத்தது. அதில் தேமுதிக, விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் புதிய போக்கை எடு்த்தனர். ஆனால் , அது வெற்றிக் கூட்டணியாக அமையவில்லை, கூட்டணியும் இப்போது இல்லை. தற்போது பல கட்சிகள் மீண்டும் திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடையே மீண்டும் வைத்துள்ளனர். 




நாம் தமிழர் கட்சி, தனித்துதான் போட்டியிடுவோம் என்றும், திராவிட கட்சிகளுக்கு மாற்று என்றும் அரசியல் களத்தில் இருந்து வருகிறது. ஆனால், அந்த கட்சியும் தேர்தல் வெற்றிகளை அடையாத நிலையிலேயே இருந்து வருகிறது. கடந்த  2021 தேர்தலில் கூட 6.6 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தாலும் கூட “ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. திமுக - அதிமுக கட்சிகளின் ஆதிக்கமே இருப்பதை பார்க்க முடிகிறது. 


நடிகர் ரஜினி, தமிழ்நாட்டு அரசியலில் மாற்று சக்தியாக உருவெடுப்பார் என பேசப்பட்ட நிலையில், அரசியலுக்கு வரப் போவதில்லை என உறுதியாக தெரிவித்து விட்டார். இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல், மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பாரா என்றால், தற்போதைய காலத்தில், அதற்கான முன்னெடுப்பை அவர் காட்டுவதாக தெரியவில்லை.


இந்நிலையில், அதிமுக கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் பிரிந்து இருப்பதால் தொண்டர்களிடையே குழப்பமான சூழல் நிலவுவதை பார்க்க முடிகிறது. 


திமுகவில் அடுத்த தலைவராக உதயநிதி ஸ்டாலின்தான் என்ற போக்கை, அக்கட்சியினர் எடுத்து வருகின்றனர். அதற்கு , துணை முதலமைச்சர் பதவி உள்ளிட்ட நிகழ்வுகளே உதாரணம். 


முன்னாள் கலைஞர் கருணாநிதி , முதலமைச்சர் ஸ்டாலின் போன்ற சிறந்த தலைவராக, உதயநிதி உருவெடுப்பாரா என்பது வருங்காலத்தில்தான் தெரியவரும். மேலும் அதிமுகவில் பலவீனம் இருப்பதையும் இருப்பதையும் பார்க்க முடிகிறது. 


சரியான தருணத்தில் வரும் விஜய்: 




இந்த நிலையில், விஜய் அரசியலுக்குள் நுழைந்தது, சரியான தருணம் என்றே சொல்லலாம், ஆனால் அவருக்கான அரசியல் ஆளுமை இருக்கிறதா என்பது பெரிதாக தெரியவில்லை, ஏனென்றால், அவரிடம் அரசியல் குறித்தான வெளிப்படையான , விரிவான பேச்சு இதுவரை வரவில்லை என்ற காரணத்தால்தான். 


இந்த தருணத்தில், கட்சியின் கொள்கை , அதன் போக்கு குறித்து நாளைய மாநாட்டில்தான் தெரியவரும். மேலும் , அவருக்கு அரசியல் குறித்தான புரிதல் உள்ளிட்டவைகள் அவரின் முதல் மாநாட்டின் பேச்சில் தெரிய வாய்ப்பிருக்கிறது. இதனால் , அந்த முதல் மாநாட்டை , பலரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். விஜய் என்ன பேச போகிறார் என்றும் கொள்கைகள் எப்படி இருக்கும் என்றும் அவரது அரசியல் பாதைக்கான மேப் நாளை என்பதால், எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


பாமக, தேமுதிக, நாதக ஆகிய கட்சிகள் முதலமைச்சர் பதவிக்கான போக்கை எடுத்தனர் , எடுத்து வருகின்றனர், ஆனால் அவர்களால் திமுக - அதிமுகவை வீழ்த்த முடியவில்லை, விஜய் வீழ்த்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.