இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதைப் பொருட்கள் பயன்பாடு ஒரு தந்தையாக மிகுந்த அச்சமாக உள்ளது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 


சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் பங்கேற்று மாணவ, மாணவியர்களை கௌரவித்தார். 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு வைர கம்மல் வழங்கினார். 


தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “இன்றைய சூழலில் தமிழகத்தில் அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். எதிர்காலத்தில் அரசியலும் மாணவர்களுக்கு ஒரு துறை ரீதியான தேர்வாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார். 


மேலும், “நண்பர்கள் பற்றி சொல்ல விரும்புகிறேன். ஒரு கட்டத்துக்குப் பின் பெற்றோருக்கு அடுத்தப்படியாக நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிக்கக்கூடிய நிலைமை ஏற்படும். எனவே நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள். நான் முன்னாடியே சொன்னமாதிரி உங்களுடைய அடையாளத்தை எதற்காகவும் இழந்து விடாதீர்கள். சமீபகாலமாக போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகமாகி விட்டது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் உள்ளது. 


ஒரு பெற்றோராக, அரசியல் இயக்கத்தின் தலைவராக எனக்கே அச்சமாக உள்ளது. இந்த போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது, இளைஞர்களை அதிலிருந்து மீட்பதெல்லாம் அரசின் கடமை என சொல்லலாம். இப்போது ஆளும் அரசு அதை தவற விட்டுவிட்டார்கள் என்பதெல்லாம் நான் பேச வரவில்லை. அதற்கான மேடை இதில்லை. சில சமயம் அரசாங்கத்தை விட நம்முடைய வாழ்க்கையை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்முடைய பாதுகாப்பு நம் கையில் தான் உள்ளது. சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள். இதனைத் தொடர்ந்து Say no to temporary pleasures, Say no to drugs என அனைவரையும் விஜய் உறுதிமொழி எடுத்துக்கொள்ள செய்தார்” என விஜய் தெரிவித்தார்.