Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி, கடும் முயற்சிக்குப் பிறகு பத்திரமாக கரையேறி உயிர் பிழைத்தது.


வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி:


நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் நீர் நிலைகளில் நீரின் அளவு அதிகரித்துள்ளதோடு, பல இடங்களில் காட்டாற்று வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், கூடலூர் தர்மகிரி பகுதியில் பாய்ந்து சென்ற காட்டாற்று வெள்ளத்தை கடக்க, மூன்று யானைகள் முயன்றன. அதில் இடம்பெற்று இருந்த ஒரு யானைக்குட்டி முதலில் ஆற்றில் இறங்கி சென்றது. அப்போது திடீரென ஆற்றில் நீரோட்டம் அதிகரிக்க, தடுமாறிய யானை கவிழ்ந்து கீழே விழுந்தது. மேலும், ஆற்று நீரில் வேகமாக அடித்து செல்லப்பட, சில நொடிகள் நீருக்குள்ளும் மூழ்கியது. இதனை கண்ட இரண்டு பெரிய யானைகளுடம் செய்வதறியாமல் கரையோரம் சென்று சுற்றி திரிந்தன.






மீண்டு வந்த யானை:


இதனிடையே, சிறிது நேரம் கழித்து நீருக்குள் இருந்து மீண்டு வந்த யானைக்குட்டி, தட்டு தடுமாறி தனது கால்களை பக்கவாட்டில் ஊன்றி கரையை நோக்கி நகர்ந்தது. கடும் முயற்சிக்குப் பிறகு கரையை நெருங்கிய யானைக்குட்டி, கரைக்கு ஏறியதுமே அங்கிருந்து காட்டுக்குள் வேகமாக ஓட்டம்பிடித்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.