தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்துகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு தடபுடலாக விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


நடப்பாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் பாராட்டு விழா நடத்துகிறார். இன்று நடக்கும் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, தேனி, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி,சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. 


பிற மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறுகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில் பிரமாண்ட முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் முழுக்க முழுக்க நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோரை பேருந்துகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அழைத்து வந்தனர். மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அழைத்து சென்றனர். 30க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அதிகாலையிலேயே விஜய் வருகை தந்துள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மாணவ, மாணவியர்கள் பசியால் வாடுவதை தடுக்க திண்பண்டங்களும் வழங்கப்படுகிறது. 


மதிய விருந்து என்ன ஸ்பெஷல்? 


சாதம், வடை, அப்பளம், அவியல், வெற்றிலை பாயாசம், மோர், மலாய் சான்விச், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல், உருளை காரகறி, வத்தக்குழம்பு, தக்காளி ரசம், கதம்ப சாம்பார், ஆனியன் மனிலா என மதிய விருந்துக்கான உணவுப்பட்டியல் வெளியாகியுள்ளது. அனைவருக்கும் போதும் போதும் என்கிற அளவில் நிறைவான உணவு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.