தேவர் குருபூஜையை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர் முத்துராமலிங்கத் தேவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன்னில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தார் முத்துராமலிங்க தேவர். “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என தெரிவித்து முத்துராமலிங்க தேவர் இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்து மறைந்தவர். அவர் அனைத்து தரப்பு மக்களிடம் நல்ல அன்பை பெற்றிருந்தார். அவர் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மறைந்தார். 

 

தேவர் குருபூஜை:

 

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 3 நாட்கள் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறுவது வழக்கம். இதில் தென்மாவட்டத்தில் உள்ள மக்கள் திரளாக பங்கேற்பது வழக்கம். வயது வித்தியாசமில்லாமல் மக்கள் காப்பு அணிந்து, விரதம் இருந்து பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மேள, தாளத்துடன் பொங்கலிட்டு, நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். இது பெரும் விழாவாகாவே கொண்டாடப்படுகிறது.

 

இந்த நிலையில், 117வது தேவர் ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜையை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் குறிப்பிடுகையில், "அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். 

 

 





 

மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்" என பதிவிட்டுள்ளார்.