தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மழை கொட்டித் தீர்த்து வந்தது. இந்த மாதம் தொடங்கியது முதலே மழை தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை கடந்த 15ம் தேதி தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.



சென்னையில் கனமழை:


இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென மதியம் முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. முகப்பேர், வடபழனி, கோயம்பேடு, கோடம்பாக்கம், கொளத்தூர், வியாசர்பாடி, அண்ணாசாலை, கிண்டி, அசோக் நகர் என நகரின் பல பகுதகிளிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், மதியம் பணிக்குச் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று புத்தாடை, பட்டாசுகள் விற்பனை காலை முதலே தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திடீரென மதியம் சென்னையில் மேகங்கள் சூழ இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால், வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.






4 மணி வரை தொடரும் மழை:


தலைநகர் சென்னையில் மழை கொட்டித் தீர்த்து வரும் வேளையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் என்று தெரிவித்திருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் திடீரென பெய்த மழைக்கு கிழக்கு திசையில் இருந்து வந்த மேகங்களே காரணம் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பேசியுள்ளார். 


மேலும், தீபாவளி பண்டிகைக்காக ஊர்களுக்கு செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில்  மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை  மையம் தெரிவித்துள்ளது.


அதேபோல, சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்காக வெளியூர்களுக்குச் செல்லத் தயாராகி வரும் நிலையில், திடீரென மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் நிற்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.