தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்துக்கு 2022-23-ம் நிதியாண்டில் 36 மில்லியன் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயித்து இருந்தது.
இந்த இலக்கை வ.உ.சி. துறைமுகம் 17 நாட்களுக்கு முன்னதாகவே எட்டி சாதனை படைத்து உள்ளது. இதுவரை 36.03 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு உள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 11.35 சதவீதம் வளர்ச்சி ஆகும்.
இந்த துறைமுகத்தில் கட்டுமானபொருட்கள் 67.41 சதவீதமும், என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்துக்கான நிலக்கரி 63.16 சதவீதமும், சுண்ணாம்புக்கல் 51.72 சதவீதமும், கந்தக அமிலம் 37.34 சதவீதமும், பாமாயில் 35.55 சதவீதமும், தொழிலக கரி 25.08 சதவீதமும், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நிலக்கரி 12.80 சதவீதமும் கையாளப்பட்டு உள்ளன.
மேலும் எளிமையான வர்த்தகத்துக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், அதிகரித்துள்ள உள்நாட்டு சரக்கு போக்குவரத்து, மொத்த சரக்கு பெட்டக பரிமாற்றம், பெரியவகை சரக்கு பெட்டக கப்பல்களின் வருகை, சரக்குத்தள முன்னுரிமை திட்டம், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் துறைமுக வாடிக்கையாளர்களை தக்கவைத்தல் ஆகியவை வ.உ.சி. துறைமுக ஆணையம் இந்த சாதனை புரிவதற்கு பெரிதும் உறுதுணையாக அமைந்தது. மேலும் இந்த துறைமுகம், அனைத்து வகையான சரக்குகள் கையாளுதலை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதால், இனிவரும் காலங்களில் இதுபோன்ற பல்வேறு சாதனைகளை புரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்