Tuticorin Rain: லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 


ஆட்சியர் அறிவுறுத்தல்:


இந்த நிலையில், தூத்துக்குடி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியான செய்திகுறிப்பில், ”தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (05.01.2024) பரவலாக நல்ல மழை பெய்து வருவதாலும் நாளை (06.01.2024) தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள்,  கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மேலும், தாமிரபரணி ஆற்றங்கரையோர  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு  செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும்  எச்சரிக்கப்படுகிறார்கள்” என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


வானிலை நிலவரம்:


நாளை, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.


வரும் 7 ஆம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


ஜனவரி 8 ஆம் தேதி,  தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


09.01.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

 

10.01.2024 மற்றும் 11.01.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


மேலும் படிக்க