கடந்த வாரம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வளி மண்டல சுழற்சி காரணமாக வரலாற்றில் இல்லாத அளவு மழை கொட்டியது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாய் மாறியது. பலரும் தங்களது வீடுகளை இழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் ஒரு சில பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது. பொது மக்களுக்கு நிவாரணப் பொருடகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் நேரில் சென்று நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


மழை நீர் தேங்கி இருக்கும் பகுதியில் தண்ணீர் அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது, தாழ்வான பகுதிகளில் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் தீயணைப்பு துறையால் பத்திரமாக மீட்கப்பட்டார். 3 நாட்கள் தொலை தொடர்பு இல்லாமல் இருந்த நிலையில் அவரது லைவ் லொக்கேஷனை டிராக் செய்து அவரை மீட்டதாக மீட்பு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது. இதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் வட்டாட்சியராக கைலாச குமாரசாமி இருந்து வந்தார். அவர் வெள்ள நிவாரண பணிகளை முறையாக செய்யவில்லை என மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன் காரணமாக ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமியை தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி பணியிடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் ஏரல் பகுதிக்கு புதிய வட்டாட்சியராக கோபாலகிருஷ்ணன் என்பவரை நியமத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


இன்று காலை தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, “ 40 மணி நேரத்தில் 54 செ.மீ மழை பெய்துள்ளது. 8,500 சதுர கிலோமீட்டரில் (தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட பரப்பளவு) 54 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 150 டி.எம்.சி தண்ணீர் அதாவது மேட்டூர் அணையின் கொள்ளளவில் 50% அதிகமாகும். பாபநாசம் மணிமுத்தாறு அணையில் 10 மடங்கு அதிக தண்ணீர். இந்த தண்ணீர் கடலுக்கு சென்றாக வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் மழைநீர் வடிகால் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.200 கோடி மதிப்பில் இந்த பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தரமாக மோட்டர் பம்புகள் அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல் இந்த மழை வெள்ள பாதிப்புகளில்  தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நிவாரண தொகை வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.