கிறிஸ்துமஸ் விழா

 

உலகம் முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு அரசு விடுமுறை என்பதால் சனி, ஞாயிறு மட்டும் திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தென் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருப்பவர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 



 

போக்குவரத்து நெரிசல்

 

செங்கல்பட்டு பழவேளி பகுதியில் இருந்து செங்கல்பட்டு பாலாறு பாலம் வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு மெதுவாக ஊர்ந்து செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.  அதேபோன்று அரையாண்டு தேர்வு நடைபெற்று முடிந்து விடுமுறையும் விடப்பட்டிருப்பதால் வாகன நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொண்டு முன்கூட்டியே பல இடங்களில் காவலர்கள் யாரும் பணியமற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 



 

சென்னை புறநகர் பகுதி

 

இதேபோன்று சென்னை புறநகர் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மெதுவாக செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று மதுராந்தகம் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடி பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



 

தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய விடுமுறை நாட்களின் பொழுது காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். ஆனால் தற்பொழுது காவல்துறையினர் சார்பில் எந்தவித கண்காணிப்பு பணியிலும் ஈடுபடாததால் போக்குவரத்து   நெரிசல் ஏற்படும் போது அதை சரி செய்ய   யாரும் இல்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

 

பயணிகள் டிக்கெட் கட்டணம்

 


கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட, கேரளா, தென் மாவட்ட மக்கள் பெருமளவு, விமானங்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து கேரளா உள்ளிட்ட, உள்நாட்டு விமானங்களில், பயணிகள் டிக்கெட் கட்டணம், பல மடங்கு உயர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு தென் மாவட்டங்கள் மற்றும் கேரள மாநில மக்கள் அதிக அளவில், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். தென் மாவட்டம் கடுமையான மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ளவர்கள், சொந்த ஊர்களுக்கு செல்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.
 

இதனால் ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு தென் மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகள், மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், கார்கள், வேன்களில் பயணத்தை தவிர்த்து, விமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர். தென் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, கேரள மாநில மக்களும் அதிக அளவில் செல்வதால், தென் மாவட்டங்கள், மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம், நிரம்பி வழிகிறது.இதை அடுத்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்திற்கு செல்லும் விமானங்களில், விமான பயணிகள் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.