பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் காவல்துறையினருக்கு சவால் விடும் வகையில் வீடியோ ஒன்றில் பேசியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சர்ச்சை வாசன் 


Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த  TTF வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார்.  இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு  சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இவருக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்கள் இருக்கும் நிலையில், சமீபகாலமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.


இவரது பைக் ஸ்டண்டுகள், நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது என இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாகவும், பிரபல யூட்யூபருமான  ஜி.பி.முத்துவை வைத்துக்கொண்டு அதிவேகமாக பைக் ஓட்டிய வீடியோ வைரலானதாலும்   போத்தனூர் காவல் துறையினர் 2 பிரிவுகளிலும்,  சூலூர் காவல் நிலையத்திலும் 3 பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக மதுக்கரை நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் சரணடைந்து ஜாமீன் பெற்றிருந்தார். 


இதனைத் தொடர்ந்து தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் ஊடகத்தினரை எச்சரிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. கடந்த இருமாதமாக பெரிய அளவில் பிரச்சினையில் சிக்காமல் இருந்த டிடிஎஃப் வாசன், கடந்த வாரம் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் உள்ள சினிமா அலுவலகம் ஒன்றை திறந்து வைக்க சென்றிருந்தார். 






அவர் வருவதை முன்னரே தெரிந்து கொண்ட அவரது ஃபாலோயர்கள் அங்கு பைக்குகளில் வந்து அதிக சத்தத்துடன் ஹாரனை எழுப்பினர். தொடர்ந்து அங்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, தெருக்களில் கூட்டம் அலைமோதியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக சென்ற பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


அதேபோல் டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், “நான் சத்தியம் பண்ணி சொல்றேன்.யார் நம்ம எல்லோரையும் விரட்டி விட்டாங்களோ. அவங்க நம்மளை ராஜ மரியாதையோடு உட்கார வைப்பாங்க பாருங்க.. கேஸ் போட்டதால எனக்கு கவலையெல்லாம் இல்லை...மேலும் துணிக்கடைக்கு போய் கட்டப்பை வாங்கிட்டு வர்ற மாதிரி இருக்கு, எங்க போனாலும் கேஸ் வாங்கிட்டு வர்றது..  என்மேல கையை வச்சா கூட ஃபீல் பண்ணியிருக்க மாட்டேன். ஆனால் பசங்க மேல கையை வச்சிட்டாங்க..


நான் என் கண்ணால பார்த்தேன். போலீஸ் கிட்ட கேக்குறப்ப பசங்க கல்ல கொண்டு அடிச்சாங்கன்னு பொய் சொல்லிட்டாங்க.. ஆனால் அப்படி எல்லாம் நடக்கல. இப்படி ஒருத்தனை தொடர்ந்து குத்திக்கிட்டே இருந்தா அவன் ஆலமரமா  வளர்றத விட, அசுர மரமா வளர்ந்துருவான். அப்படித்தான் நான் இருக்கேன்” என அந்த வீடியோவில் டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.