அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தனது மனு மீதான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். 


பொதுக்குழு முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பிடம் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இருதரப்பும் சமரசமாக செல்ல வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என இருதரப்பும் உறுதியாக தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என தெரிவித்து, அங்கு செல்லுமாறு ஓபிஎஸ் தரப்பை அறிவுறுத்திய நீதிபதி என்.வி.ரமணா அமர்வு 3 வாரங்களுக்குள் இந்த வழக்கை முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 


இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொள்ள நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, இன்று தனது பயணத்தை முடித்துக் கொண்டு குஜராத் புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் பிரதமரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தனது மனு மீதான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கையுடன் கூறினார். 


முன்னதாக கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை  வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டர். இதனைத் தொடர்ந்து கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அந்த பொறுப்புக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து பொதுக்குழு முடிவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட ஓ.பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத்திலும் ஜூலை 13 ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான மனுவில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என அறிவிக்கவும், விதியை மீறி இது நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் விதிப்படி பொதுக்குழுவை நடத்தவே உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் இந்த பொதுக்குழு விதியை மீறி நடைபெற்றதாக கூறப்பட்டது. 


இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், அதிமுக தலைமை நிலைய செயலகம் தரப்பிலும் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண