அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தற்போது தொடங்கி நடைபெற்று நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். 


அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் வேல்ராஜ், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். 


ஆளுநர் - தமிழக அரசு மோதல்


ஆளுநருக்கும் ஆளும் தமிழக அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. மாநிலத்தின் பிற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில், ஆளுநர் - உயர் கல்வித்துறை அமைச்சர் மோதலும் பேசுபொருளாக மாறியது. 


மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவையே உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார்.  நீண்ட காலமாக அண்ணா பல்கலைக்கழக 2021ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது. எனினும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேதி கொடுத்த பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். 


7 அடுக்குப் பாதுகாப்பு 


இதற்கிடையே தமிழகத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் பிரதமர் மோடி நேற்று (ஜூலை 28ஆம் தேதி) தொடங்கி வைத்தார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 29ஆம் தேதி) நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளார். 70 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பிரதமர் இதில் பங்கேற்கிறார். நேருவுக்குப் பின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் முதல் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். இதை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் 7 அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்குத் தங்க பதக்கம் வழங்கப்பட உள்ளது. பிரதமர் மோடி பங்கேற்று பதக்கங்களை வழங்க உள்ளார். 


அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தற்போது தொடங்கி நடைபெற்று நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். 


உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். அந்த வகையில் அமைச்சர் பொன்முடி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் நினைவுப் பரிசை வழங்கினார். அதைத் தொடர்ந்து வரவேற்பு உரையையும் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.


முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.