கட்டணமில்லா மகளிர் பயணத் திட்டத்தின் மூலம் அரசு பேருந்துகளில் இதுவரை 173 கோடி பெண்கள் பயணம் மேற்கொண்டு பலன் பெற்றுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசினார். அப்போது ”கட்டணமில்லா மகளிர் பயணத் திட்டத்தின் மூலம் அரசு பேருந்துகளில் இதுவரை 173 கோடி பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இத்திட்டத்திற்கு அரசு நிதி உதவி வழங்குவதால் போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பு எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வரக்கூடிய காலை, மாலை நேரங்களில் பஸ் பற்றாக்குறை என்ற நிலை ஏற்படாதபடி, பள்ளி கல்வித்துறையிடம் கலந்தாலோசித்து பஸ்களை இயக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலை உள்ளதால் பஸ்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, பயணிகளுக்கு எவ்வித இடர்பாடுகளும் ஏற்படா வண்ணம் இயக்க நடவடிக்கை எடுக்கும்படியும் ஊழியர்களை வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் பெண்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது என்று ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து கழகங்கள் சார்பாக வாட்ஸ் அப் குழு ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்துத் துறை அதிகாரிகள், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அதில் இணைக்கப்பட்டு உள்ளனர். பெண்களை ஓசியில் பயணிப்பதாக கூறிய குற்றச்சாட்டின் எதிரொலியாக அவர்கள், பஸ் நடத்துநர்களும் தங்களை தரக்குறைவாக நடத்துவதாக வந்த தகவல்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
இலவசமாக பெண்கள் பயணிப்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாகும். பெண்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது என்று அரசு பஸ் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மேலாண் இயக்குநர்கள், கிளை மேலாளர்களின் மூலம் அறிவுரை வழங்குவார்கள். பஸ் டிக்கெட் கட்டணம் ஏறவே ஏறாது என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
பக்கத்து மாநிலங்களில் டீசல் விலை ஏறும்போதெல்லாம் பஸ் கட்டணத்தை உயர்த்துவது நடைமுறையில் உள்ளது. சில மாநிலங்களில் போக்குவரத்து கழகங்களே கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றன. ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே உள்ள கட்டண விகிதமே தொடரும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னதாக இலவச பேருந்தில் பயணித்த மூதாட்டி ஒருவர், ஓசியில் நான் வர மாட்டேன் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிதான் பயணிப்பேன் எனப் பேசிய நடத்துநருடன் வாதிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.