போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் எனவும், போக்குவரத்து ஊழியர்கள், வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. 


காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு:


காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு அதிகரிப்பு, ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றி தரக்கோரி தொடர்ந்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, இது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்று சமீபத்தில் நடந்தது.


அப்போது, இந்த கூட்டத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோ, தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ரமேஷ் மற்றும் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின்போது தொழிலாளர்கள் முன்வைத்த 6 அம்ச கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து வருகின்ற ஜனவரி 9ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர். 


இந்தநிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், “போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும். எனவே, வேலை நிறுத்தத்தில் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் கலந்து கொள்ளாமல் அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த விதமான விடுப்புகளையும் தவிர்த்து பணிக்கு ஆஜராக வேண்டும். மேலும் சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் என்றும் போக்குவரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.


போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்:


இந்தநிலையில், போக்குவரத்துத்துறை தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்கள் எடுத்துள்ள வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”அதிமுக ஆட்சிக் காலத்தில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உரிய காலத்தில் முடிக்கப்படவில்லை. அதனால், தொழிலாளர்கள் நிர்கதியாகினர். முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டன.


சமீப காலத்தில் தமிழ்நாட்டில் புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கியும், புதிய பணியாளர்கள் நியமனத்துக்கு அனுமதி அளித்து போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தீபாவளி போனஸ் குறைவாக வழங்கப்பட்டது. ஆனால், தற்போது எந்தவொரு தொழிற்சங்கங்களும் கோரிக்கை வைக்காமலேயே மீண்டும் 20 விழுக்காடு உயர்த்தி திமுக அரசால் ரூ.16,800 வழங்கப்பட்டது. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, வாரிசு அடிப்படையில் பணி போன்றவற்றையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது” என தெரிவித்திருந்தார்.