தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சிவகங்கை, மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. தொடக்கத்தில் மழை கிட்டத்தட்ட 33% குறைவாக பதிவானது ஆனால் நவம்பர் இறுதி முதல் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையத் தொடங்கியது. டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக அதிகனமழை பதிவானது. இதனால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போனது. அதேபோல் டிசம்பர் 17 ஆம் தேதி ஒட்டி வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பதிவானது. நெல்லை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
வழக்கமாக அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை, டிசம்பர் இறுதியில் வலுவிழக்கும். ஆனால் இந்த ஆண்டு, ஜனவரி மாதம் தொடங்கியும் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வராமல் இருக்கிறது. தென் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பதிவாகி வருகிறது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை பகல் நேரங்களில் வெயில் இருந்தால் கூட வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நேற்று மாலை சென்னையில் அனேக இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது. இன்று காலை முதல் மடிப்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பதிவாகி வருகிறது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் ஆனால் மழையின் காரணமாக பனிப்பொழிவு குறைவாக தான் உள்ளது.
மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல் நாளை மறுநாள், கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.