கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்தவர் ஜாகீர்(59). கொரோனா நோய் தொற்று காரணமாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனை கொரோனா பிரிவுக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாயன்று உயிரிழந்த நிலையில், அதே போல் கொரோனா தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த ஆறுமுகம்(51) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இருவரின் உடல்களும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 



 

ஆறுமுகத்திற்கு மேற்கொண்ட கொரோனா இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிய வந்த நிலையில், அவரது உடலை நல்லடக்கம் செய்ய குடும்பத்தார் முயன்ற, உடலில் இருந்த திரையை நீக்கிய போது அங்கு ஆறுமுகத்தின் சடலத்திற்கு பதில் வேறு சடலம் இருந்தது தெரியவந்தது. உடனே மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, ஆறுமுகம் உடலும், ஜாகீர் உடலும் மாற்றி வழங்கப்பட்டது தெரியவந்தது. 

உடனே புவனகிரியில் உள்ள ஜாகீர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, கொரோனா தொற்று இருந்ததால் சடலத்தை பார்க்காமல் ஜாகீர் என நினைத்து ஆறுமுகத்தின் உடலை அவர்களது முறைப்படி நல்லடக்கம் செய்தது தெரியவந்தது.

 



தகவல் அறிந்து ஜாகீர் குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்தனர். இருதரப்பும் தங்களுக்கு சொந்தமான சடலத்தை தருமாறு அதிகாரிகளிடம் முறையிட்டனர். இருதரப்பையும் சமரசம் செய்த அதிகாரிகள், அவர்களின் ஒப்புதலுடன் ஆறுமுகத்தின் சடலத்தை எடுத்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை. கொரோனா பாதித்தவரின் உடலை தோண்டி எடுக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களையும் அதிகாரிகள் சமரசம் செய்து ஒருவழியாக ஆறுமுகம் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் இரு சடலங்களும் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களின் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. 


சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷிடம் கேட்ட போது, ‛‛உடல்களை வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பின் ஒப்புதலுடன் உடல்கள் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தவறுக்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்,’’ என்றார்.