சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் உற்சாகமாக பயணம் செய்தனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் அரசு ஊரடங்கு அறிவித்தது. மேலும் சுற்றுலா தலங்கள், கடற்கரைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காணவும், கடலின் அழகை ரசிக்கவும் முடியாமல் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட, வெளி மாநில சுற்றுலா பயணிகள் தவித்து வந்தனர்.
மேலும், சுற்றுலா பயணிகளை நம்பி அங்கு கடைகளை நடத்தி வந்த வியாபாரிகளும் வருமானமின்றி பாதிப்புக்குள்ளாகி வந்தனர். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் கடற்கரைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 6 மணி முதல் சுற்றுலா தலங்கள், கடற்கரைகளுக்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று காலை கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி அதிகாலையே சூரிய உதயத்தை காண கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். ஆனால், மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெளிவாக தெரியவில்லை.
இருப்பினும், சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் கடற்கரை சாலை, காந்தி மண்டபம், சன்செட் பாயிண்ட் பகுதி உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். பின்னர், அவர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும், விவேகானந்தா கேந்திர வளாகத்தில் உள்ள ராமாயண கண்காட்சி கூடம் ஆகியவற்றையும் மிகவும் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். சுற்றுலா தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு நேற்று மதியம் 12.15 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கியது.
இதனால், சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் படகில் சென்று விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர். படகுபோக்குவரத்து மாலை 4 மணி வரை நடைபெற்றது.
வழக்கம் போல் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து படகு போக்குவரத்து நடைபெறும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து துறை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகையை தொடர்ந்து நடைபாதை வியாபாரிகள், கடற்கரை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.