மத்திய பாஜக அரசு நிதி ஆயோக் உதவியுடன் தேசிய பணமாக்குதல் என்ற திட்டத்தின் மூலம் பெரும் வருவாய் தரக்கூடிய அரசு சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு ₹6 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. அதன்படி, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கங்கள், தேசிய நெடுஞ்சாலைகளை தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


2022 முதல் 2025 வரையிலான இந்த காலக்கட்டத்தில் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 15 ரயில்நிலையங்கள், 25 விமான நிலையங்கள், 160 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளன. குறிப்பாக இதில் தமிழ்நாட்டில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் விமான நிலையங்கள் தனியார் வசம் செல்கின்றன.


விமான நிலையம்:


தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் திருச்சி விமான நிலையம் முதலில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து மதுரை, கோவை விமான நிலையங்களும் அடுத்தபடியாக சென்னை விமான நிலையமும் குத்தகைக்காக தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது.


தேசிய நெடுஞ்சாலைகள்:


தமிழ்நாட்டில் 491 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளை தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, உளுந்தூர்பேட்டை - பாடாலூர், உளுந்தூர்பேட்டை - திண்டிவனம், திருச்சி - பாடாலூர், கிருஷ்ணகிரி - தோப்பூர்காட், ஓசூர் - கிருஷ்ணகிரி, தாம்பரம் - திண்டிவனம், திருச்சி - காரைக்குடி ஆகிய நெடுஞ்சாலைகள் தனியார் குத்தகைக்கு செல்கின்றன.


ரயில் நிலையங்கள்:


தமிழ்நாட்டு மக்களின் ஆஸ்தான சுற்றுலா தளமான ஊட்டியில் இயங்கும் மலை ரயில், சென்னை ரயில் நிலையங்களும் தனியாரிடம் மத்திய அரசால் குத்தகைக்கு விடப்பட உள்ளன.



துறைமுகம்:


இந்தியாவில் அதிக வருவாய் பெற்றுத்தரும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தையும் மத்திய அரசு தனியாரிடம் குத்தகைக்காக வழங்க முடிவு  செய்து உள்ளது.


என்.எல்.சி மற்றும் எரிவாயு குழாய்கள்: 


நெய்வேலின் என்.எல்.சி. யின் சூரியஒளி மின்சார நிறுவனம், காவேரி டெல்டா பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்கள்,  போன்றவற்றையும் தனியாருக்கு குத்தகைக்கு விட்டு வருவாய் பெற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.



நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்


 


இதுகுறித்து பேசியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "தேசிய பணமாக்கும் திட்டம் என்பது அரசு நிறுவனங்கள் மீது தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்த நிறுவனங்களை தனியாரிடம் குத்தகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய், புதிய திட்டங்களை தொடங்குவதற்கும், உள் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தப்படும்" என்றார்.