தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மற்றும்  மே மாதங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவலின் போது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் முழுவதுமாக நிரம்பின. எனவே, இடபற்ற குறையால் கல்லூரி வளாகங்கள் மற்றும் பள்ளிகள்  போன்ற இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டது.


அப்போது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக அவுட் சோர்சிங் முறையில், இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். அதன்படி, செய்யாறுவுக்கு உட்பட்ட பகுதிகளில் 54 சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த பணி நியமனத்தை நேரடி நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 



இந்நிலையில் பணிக்கு சேர்ந்த சுகாதார ஆய்வாளர்கள் பலருக்கு மருத்துவப்பணி தொடர்பான எந்த அடிப்படை அறிவும் இல்லாதது மருத்துவர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து இருக்கலாம் என சந்தேகமடைந்த மருத்துவர்கள் இது தொடர்பாக மருத்துவர்கள் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். இதன்தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து இந்த புகார் குறித்து விசாரிக்காமல் அதிகாரிகள் மூடி மறைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் நடைப்பெற்றுள்ளது.


இந்நிலையில் பணி நியமனத்தில் அசல் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த நபர்கள் உரிய ஆதாரங்களுடன் சென்னையில் உள்ள சுகாதாரத்துறை இயக்குனருக்கு புகார் அனுப்பியுள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், விசாரணை தொடங்கியது. அப்போது, துணை மருத்துவப் படிப்புகளை முடித்ததாக போலியான சான்று கொடுத்து 25க்கும் மேற்பட்டோர் பணியில் சேர்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் பணியில் சேர்ந்தவர்கள் கொடுத்த துணை மருத்துவப்புக்கான சான்றிதழில் இருந்த முகவரியின் அப்படி ஒரு மருத்துவ கல்வி நிறுவனமே இல்லை என்பதும் வந்துள்ளது.




 


எனவே, போலியான சான்றிதழ்கள் பெற்று பணியில் சேர்ந்து இருப்பதும், இதற்கு மிகப்பெரிய மோசடி கும்பல்  செயல்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி சான்றிதழ்களை தயாரித்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்யாறு சுகாதார மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சங்கீதா திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டியிடம்  புகார் அளித்தார். 



இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுகாதார பகுதியில் போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தாக புகார் அளித்துள்ளனர். அது பற்றி உரிய விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டேன். இதுதொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ள குற்ற பிரிவு காவல்துறையினர், சுகாதார ஆய்வாளர்கள் அளித்த போலி துணை மருத்துவ படிப்பு சான்றிதழ்கள் அனைத்தையும் கைப்பற்றியுள்ளனர். எனவே, அடுத்தடுத்த விசாரணையில் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் பலர் சிக்குவார்கள் என கூறினார் .



உயிர்காக்கும்  மருத்துவ பணியில், மருத்துவ படிப்பு படிக்காத 25க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்துள்ளது பொது மக்கள் மட்டுமின்றி மருத்துவத்துறையை சேர்ந்தவர்களையும் கடும் அதிர்ச்சிகுள்ளாக்கி உள்ளது.