தமிழில் படித்தோருக்கு மட்டுமே அரசு வேலை, முழு மதுவிலக்கு, ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் என்று பாமக நிழல் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பாட்டாளி மக்கள் கட்சியின் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:


வரவு - செலவு


1. 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின்  வருவாய் வரவுகள் ரூ.4,98,876 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,92,396 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.1,80,547 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.


2. நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,16,189 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,41,624 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிக மிக குறைந்த அளவிலேயே இருக்கும்.


3. 2023-24 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.57,252 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.17,313 கோடி என்ற அளவில் மிகக் குறைவாக இருக்கும். வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப்பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.


தமிழக பொருளாதாரம் - ஓர் ஆய்வு!


4. 2022-23ஆம் ஆண்டில் ரூ.2,31,407.28 கோடி மொத்த வருவாய் ஈட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் ஓரளவு மீட்சி அடைந்துள்ளது. அதன் காரணமாக, நடப்பாண்டின் வருவாய் இழப்புகளை தமிழ்நாடு அரசு எளிதாக ஈட்டிவிடும். இலக்கையும் கடந்து ரூ.2.50 லட்சம் கோடி வருவாய் ஈட்டவும் வாய்ப்புள்ளது.


5. 2022-23ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய் அதிகரித்திருந்தாலும் கூட, அதற்கு இணையாக செலவுகளும் அதிகரித்திருக்கிறது என்பதால், வருவாய் பற்றாக்குறை அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.52,781.17 கோடியையும், நிதிப் பற்றாக்குறை ரூ.90,113.71 கோடியையும் கடக்கும்.


6. 2022-23ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிகர கடன் அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.90,116.52 கோடி என்ற இலக்கைத் தாண்டும். ரூ.1 லட்சம் கோடியை எட்டவும் வாய்ப்புள்ளது.


7. 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, தமிழக அரசின் மொத்த கடன் தொகை ரூ.6,53,348.73 கோடியாக இருக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதுவும் சுமார் ரூ.6.5 லட்சம் கோடி என்ற அளவை நெருங்கக்கூடும்.


பொருளாதாரம் மந்தமடையும்


8. 2022-23ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்த போதிலும், 2023-24ஆம் ஆண்டில் உலகளாவிய சூழல்கள் காரணமாக, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடையும். 2021-22ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி, 2023-24ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு ரூ.26,67,875 கோடியாக இருக்க வேண்டும். ஆனால், மாநில உற்பத்தி மதிப்பு ரூ.26 லட்சம் கோடிக்கும் குறைவாகவே இருக்கும்.


9. 31.03.2024ஆம் நாள் அன்று தமிழ்நாடு அரசின் நேரடிக் கடன் ரூ.7.53 லட்சம் கோடியாக இருக்கும்.


10. மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும் கூட, 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியம் ரூ.5 ஆயிரம் கோடி இழப்பை எதிர்கொள்ளும். 2023-24ஆம் ஆண்டு முதல் மின்வாரியம் இலாபத்தில் இயங்கும்.


11. 2023-24ஆம் ஆண்டின் நிறைவில் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.5 லட்சம் கோடியாக இருக்கும்.


12. தமிழ்நாடு அரசின் நேரடிக் கடன், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ஆகிய இரண்டும் சேர்த்து, 2023-24ஆம் ஆண்டின் நிறைவில் ரூ.12.53 லட்சம் கோடியாக இருக்கக்கூடும்.


ஒட்டுமொத்த வட்டி ரூ.1.02 லட்சம் கோடி


13. 2023-24ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் நேரடிக் கடனுக்காக ரூ.60,240 கோடி வட்டி செலுத்த வேண்டியிருக்கும். பொதுத்துறை நிறுவனங்களின் கடனுக்காக ரூ.42,500 கோடி வட்டி செலுத்த வேண்டும். மொத்த வட்டியின் அளவு ரூ.1,02,740 கோடியாக இருக்கும்.


14. தமிழ்நாடு அரசு வட்டிக்காக மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.281.47 கோடியை செலுத்த வேண்டியிருக்கும்.


15. ரூ.3.88 லட்சம் கோடி கடன் ஐந்தாண்டுகளில் அடைக்கப்படும்


16. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தமிழ்நாடு அரசு பத்திரங்கள் விற்பனை மூலம் ரூ.4,73,178 கோடி கடன் பெற்றுள்ளது. இவற்றில் ரூ.1,74,573.90 கோடி கடனை அடுத்த 5 ஆண்டுகளிலும் ரூ.2,14,314.30 கோடி கடனை அதற்கடுத்த ஐந்தாண்டுகளிலும் தமிழ்நாடு அரசு செலுத்த வேண்டும்.


17. மீதமுள்ள கடனை 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு செலுத்தினால் போதுமானது.


18. தமிழ்நாடு அரசு அடுத்த 10 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய ரூ.3,88,882.20 கோடி கடனை அடுத்த ஐந்தாண்டுகளில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


19. வரி அல்லாத வருவாயை ரூ.1.80 லட்சம் கோடியாக உயர்த்த சிறப்புத் திட்டம்


20. கடந்த ஆண்டில் தமிழ்நாடு அரசின் வரி வருவாய் ரூ.15,000 கோடி மட்டுமே. 2023-24ஆம் ஆண்டில் இதை ரூ.1.80 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்த்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.


21. கிரானைட், தாதுமணல் விற்பனை மூலம் ரூ.1.15 லட்சம் கோடியும், மணல் இறக்குமதி, செயற்கை மணல் விற்பனை ஆகியவற்றின் மூலம் ரூ.35,000 கோடியும் ஈட்டப்படும்.


22. பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயங்கச் செய்வதன் மூலம் ரூ.15,000 கோடி கிடைக்கும்.


23. ரூ.1.65 லட்சம் கோடி அளவுக்கு கூடுதலாக வருவாய் ஈட்டுவதன் மூலம், வரியல்லாத வருவாயின் அளவு ரூ.1.80 லட்சம் கோடி என்ற அளவை எட்டும்.


24. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.
25. 2023-24 போதைப் பொருள் ஒழிப்பு சிறப்பாண்டு


26. 2023-24ஆம் ஆண்டு போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான சிறப்பாண்டாக கடைப்பிடிக்கப்படும்.
27. போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக காவல்துறை டிஜிபி நிலையிலான அதிகாரி தலைமையில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும். மண்டலத்திற்கு ஒரு டிஐஜியும், இரு மாவட்டங்களுக்கு ஒரு கண்காணிப்பாளரும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.  
28. போதைப் பொருட்களை விற்பவர்கள், கடத்துபவர்கள், ஒரு முறைக்கு மேல் அக்குற்றத்தை செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
29. மே 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். 
30. தமிழ்நாட்டில் அனைத்து மது, பீர் ஆலைகள் மூடப்படும்.
31. குட்காவை தடை செய்ய புதிய சட்டம் இயற்றும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
32. ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000
33. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.
34. ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 உதவி வழங்கப்பட்டாலும், அக்குடும்பங்களுக்கு அரசால் வழங்கப்படும் பிற சமூகப் பாதுகாப்பு திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும்.
35. முதியோர், ஆதரவற்றோருக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படும். 20 லட்சம் பேருக்கு இந்த நிதியுதவி வழங்க ரூ.3,600 கோடி ஒதுக்கப்படும்.
36. 2023-24ஆம் ஆண்டில் 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை
37. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4.50 லட்சம் பணியிடங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பப்படும். நடப்பாண்டில், 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
38. தமிழக அரசுத் துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் அனைவருக்கும் பணி நிலைப்பும், காலமுறை ஊதியமும் வழங்கப்படும்.


39. தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% இடஒதுக்கீடு
40. தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் மாத வருமானம் ரூ.40,000 வரை உள்ள பணிகளில் 80% தமிழர்களுக்கு வழங்க புதிய சட்டம் நிறைவேற்றப்படும்.
41. தமிழ்நாட்டில் தொழில் திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவது கட்டாயம் ஆக்கப்படும்.
42. தொழில் திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களில் உள்ள வேலைவாய்ப்பு பெற தகுதியானவர்களின் பட்டியல், முதலில் நிலம் கொடுத்தவர்களில் முன்னுரிமை என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டு, அந்த வரிசையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.


43. ஐந்தாண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள்
44. தமிழ்நாட்டில் தொழில், உற்பத்தி, தளவாட மேலாண்மை, உள்ளிட்டவற்றின் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
45. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த பணிகள் மூலம் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.


46. டிஎன்பிஎஸ்சி: நிலையான தேர்வு அட்டவணை


47. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில், குறிப்பிட்ட போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, குறிப்பிட்ட மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
48. ஜனவரி, ஜூலை மாதங்களில் குரூப்- 4 பணிகளுக்கும், பிப்ரவரி மாதத்தில் குரூப்- 1 பணிகளுக்கும், மார்ச் மாதத்தில் குரூப்- 2 பணிகளுக்கும் அறிவிக்கைகள் வெளியிடப்படும்.
49. குரூப்- 1 பணிகள் தவிர்த்து, பிற பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படும்.
50. வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை
51. படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. அதன்படி, மாதம் ரூ.5,000 வரை உதவித்தொகை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. உதவித்தொகை விவரம்:
i. 1. பத்தாம் வகுப்பில் தோல்வி ரூ.1,000
b. 2. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி ரூ.2,000
c. 3. 12ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.3,000
d. 4. பட்டப்படிப்பு முடித்தவர்கள் ரூ.4,000
e. 5. பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் ரூ.5,000
52. இடைநிற்றலைத் தடுக்க ரூ.15,000 வரை நிதி
a. தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்பில் சேரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ரூ.5,000 இடைநிற்றல் தடுப்பு உதவியாக வழங்கப்படும்.
b. அதேபோல், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11ஆம் வகுப்பில் சேருவோருக்கு ரூ.10 ஆயிரமும், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேருவோருக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும்.


53. பள்ளிக்கல்விக்கு ரூ.1 லட்சம் கோடி: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.26,000 கோடி
54. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்த சிறப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
55. மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 25 பள்ளிகள் வீதம் மொத்தம் 1000 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும். இவற்றில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கும்.
56. பள்ளிக் கல்வித்துறைக்கு நடப்பாண்டில் ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
57. பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்காக சமூக அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நிதிதிரட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியைப் போன்று, தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.


58. மாநில கல்விக் கொள்கை
59. தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கை நடப்பாண்டில் வெளியிடப்படும்.
60. கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
61. காலை உணவுத் திட்டம் அனைத்துப் பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்படும்.


62. உயர்கல்வி
63. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் விகிதத்தை 2025ஆம் ஆண்டுக்குள் 55 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
65. உயர்கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
66. அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் ஆராய்ச்சிக்கான இருக்கைகள் ஏற்படுத்தப்படும்.
67. கல்விக் கடன்கள் தள்ளுபடி
68. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று படித்து வேலையில்லாமல் தவிக்கும் மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இதற்கான தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு தமிழக அரசே செலுத்தும்.


69. மருத்துவத்துறைக்கு ரூ.39,000 கோடி
70. 2023-24ஆம் ஆண்டில் மருத்துவத்துறைக்கான நிதி ஒதுக்கீடு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 1.5%ஆக, அதாவது ரூ.39,000 கோடியாக உயர்த்தப்படும்.
71. மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.
72. பொதுமக்களின் உடல் நலம் குறித்த விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும்.
73. அவசர ஊர்திகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 1,353-லிருந்து 2,000ஆக உயர்த்தப்படும்.
74. மயிலாடுதுறை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
75. புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும்.


76. மீண்டும் தாலிக்குத் தங்கம் திட்டம்
77. தமிழ்நாட்டில் இரத்து செய்யப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி, ஒரு பவுன் தங்கமும், ரூ.50 ஆயிரம் வரை பணமும் வழங்கப்படும்.
78. தாலிக்குத் தங்கம் திட்டத்திற்கு மாற்றாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்டப் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு  மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.


79. வன்னியர்கள் இடஒதுக்கீடு
80. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பரிந்துரை அறிக்கையை, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து ஏப்ரல் 11ஆம் தேதிக்குள் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
81. சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
82. விஸ்வகர்மாக்கள், யாதவர்கள், முத்தரையர்கள், ஆகியோருக்கு மக்கள் தொகை அடிப்படையில் உள்இடஒதுக்கீடு வழங்கப்படும்.
83. நாவிதர், வண்ணார், பருவதராசகுலம், ஒட்டர், வலையர், அம்பலக்காரர், குரும்பர், குயவர், வேட்டுவக்கவுண்டர், ஊராளி கவுண்டர் ஆகிய 10 சமுதாயங்களும் ஒரு பிரிவாக உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.
84. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் உள்ள மற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு / தொகுப்பு ஒதுக்கீடு வழங்கப்படும்.


85. பிற்படுத்தப்பட்ட வகுப்பு கார்ப்பரேஷன்
86. தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இடஒதுக்கீட்டின் பயன்கள் எந்த அளவுக்கு கிடைத்துள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
87. ஆந்திராவில் உள்ளதைப் போன்று, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சாதிகளில் 30 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட அனைத்து சாதிகளின் முன்னேற்றத்திற்கும் தனித்தனியாக கார்ப்பரேஷன்கள் அமைக்கப்படும்.
88. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த கார்ப்பரேஷன்கள் மூலமாக ரூ.3 லட்சம் கோடி செலவிடப்படும்.


89. தமிழில் படித்தோருக்கு மட்டுமே அரசு வேலை
90. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும்.
91. தமிழ்வழியில் படித்தோருக்கு உயர்கல்வியில் 30% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
92. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு நேரடியாக தமிழ் கற்றுத் தருவதற்காக ஒவ்வொரு நாட்டிலும் தமிழ் பரப்புரை கழகத்தின் கிளைகள் தொடங்கப்படும்.
93. மழலையர் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி கட்டாயமாக்கப்படும்.


தமிழில் பெயர்ப் பலகைகள் வைத்தால் ரூ.1,000


94. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைத்தால், ரூ.1,000 வழங்கப்படும்.
95. தமிழ்நாட்டில் அனைத்துக் கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும்.
96. கீழடி அகழாய்வின் அறிக்கைகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.


ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி தொழில் முதலீடு


97. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி என்ற அளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்படும்.
98. நான்காம் தொழில்நுட்பப் புரட்சியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வேலைவாய்ப்பும் ஏற்றுமதியும் அதிகரிக்கப்படும்.
99. தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஒருங்கிணைந்த தொழில் மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்.


ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம்


100. தமிழக சட்டப்பேரவை குறைந்தது ஆண்டுக்கு 3 முறையும், 100 நாட்களும் கூடி மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வ விவாதம் நடத்துவதை தமிழக அரசு உறுதி செய்யும்.
101. ஒவ்வொரு மாவட்டத்திலும் 12 லட்சம் பேர் இருக்கும் வகையில் மாவட்டங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும். தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 60ஆக உயர்த்தப்படும்.


பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது


102. தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகங்களை நிர்வாக சீர்திருத்தத்தின் மூலமாக இலாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
103. தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படாது.
104. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை 60 கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் மாற்றவும், மொத்த சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை 55லிருந்து 17ஆக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
105. நகர்ப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்காக நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதற்கான நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும்.


ரூ.25 லட்சம் கோடியில் உட்கட்டமைப்பு


106. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.25 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். பத்தாண்டு திட்டமான இத்திட்டத்தின் நான்காவது ஆண்டான நடப்பாண்டில், ரூ.50,000 அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும்.


107. புதிய உயர்கல்வி நிறுவனங்கள்
108. தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். அவற்றின் விவரம் வருமாறு:
109. அண்ணா பல்கலைக் கழகம் உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக  (Anna University  Institute of Eminence (IoE)) மாற்றப்படும். மாணவர் சேர்க்கை மற்றும் இடஒதுக்கீட்டில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும்.
111. பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க அண்ணா பல்கலைக் கழகம்  - இணைப்பு (Anna University Affiliation) என்ற புதிய பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.


112. சென்னைப் பல்கலைக் கழகம் உயர்சிறப்பு கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.
113. தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஐ.ஐ.டிக்கு இணையான தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology - TIT)
114. - ஜிமிஜி) ஏற்படுத்தப்படும்.


வலிமையான லோக் ஆயுக்தா
115. தமிழ்நாட்டில் தற்போது முடக்கப்பட்டிருக்கும் லோக் அயுக்தாவிற்கு புத்துயிரூட்டப்படுவதுடன், கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்படும்.
116. முதலமைச்சர், அமைச்சர்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் லோக்அயுக்தாவின் அதிகார வரம்பிற்கு கீழ் கொண்டுவரப்படுவார்கள்.’


பொதுச் சேவை உரிமைச் சட்டம்
117. தமிழ்நாட்டில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்படும். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.


118. மாதம் ஒருமுறை மின் அளவீடு
119. தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். இதனால் மின்கட்டணம் மேலும் 47.32% குறையும்.
120. அடுத்த 5 ஆண்டுகளில் 17,340 மெகாவாட் அனல்மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
121. அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
122. மின்வாரியத்தை இலாபத்தில் இயக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
123. ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின்திட்டம் செயல்படுத்தப்படும்.


சட்டம் - ஒழுங்கு
124. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னை தவிர்த்த தமிழகத்தின் மற்ற பகுதிகள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு டிஜிபி நிலை அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
125. காவல்துறையினருக்கு 8 மணிநேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.


வேளாண்மை
126. வேளாண்துறைக்கு 2023-24ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.53,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
127. வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.
128. வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.18,500 கோடி செலவிடப்படும்.
129. நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்படும். அதையும் சேர்த்தால், வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.73,000 கோடியாக இருக்கும்.
130. பாசனப் பரப்பை மீட்டெடுப்பதற்கான சிறப்பாண்டாக 2023-24ஆம் ஆண்டு கடைபிடிக்கப்படும்.
131. அடுத்த 5 ஆண்டுகளில் 7.3 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி செய்து தரப்படும்.


பாசனத் திட்டங்களுக்கு நிதி திரட்ட சிறப்பு வரி
132. வேளாண் பாசனத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக பெட்ரோலியப் பொருட்களின் மதிப்புக் கூட்டுவரி மீது 10%, முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மீது 20%, மோட்டார் வாகன வரிகள் மீது 30% சிறப்புத் தீர்வை வசூலிக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி நிதி திரட்டப்படும்.
133. தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3,504இல் இருந்து 4,000ஆக உயர்த்தப்படும். நெல் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கை 400ஆக உயர்த்தப்படும்.
134. 2021-22ஆம் ஆண்டில் 43 இலட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில், 2023-24ஆம் ஆண்டில் 72 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும்.
135. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,700 விலை வழங்கப்படும்.
136. 2023-24 ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.5,000ஆக நிர்ணயிக்கப்படும்.
137. வேளாண் தொழிலில் இலாபத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன், வேளாண் உற்பத்தியைப் பெருக்குதல், மதிப்புக் கூட்டுதல், சந்தைப் படுத்துதல் ஆகிய 3 துறை சார்ந்த 250 வேளாண் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிக்கப்படும்.
138. மத்திய அரசால் வழங்கப்படும் உழவர் மூலதன மானிய திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 23.04 லட்சமாக குறைந்துவிட்டது. இதை 60 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.


என்.எல்.சி.: வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தாது
139. தமிழ்நாட்டில் எந்தத் தொழில் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவும் வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்ற கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கிறது.
140. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது. இதுதொடர்பான என்.எல்.சி.யின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காது.
141. தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் காய்கறிகள் பழங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தபட்ச ஆதரவு விலையை தமிழக அரசே நிர்ணயிக்கும்.
142. தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சிறுதானிய உணவகங்கள் அமைக்கப்படும். அவற்றில் சிறுதானிய உணவுப் பொருட்களுடன் சிறுதானியங்களும் விற்கப்படும்.
143. தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் உழவர்கள் உற்பத்தி செய்யும் நாட்டுச் சர்க்கரையை ஒரு கிலோ ரூ.60 என்ற விலையில் தமிழக அரசே கொள்முதல் செய்யும்.
144. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையிலும், அதற்குப் பிறகு பருவம் தவறி பெய்த மழையிலும் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும்.
145. கொங்கு மண்டலத்தை வளம் கொழிக்கச் செய்த நொய்யல் ஆற்றை மாசு மற்றும் கழிவுகள் கலப்பதில் இருந்து மீட்டெடுப்பதற்காக ரூ.10,000 கோடியில் நொய்யல் ஆறு மீட்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
146. அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகளில் 100 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவு கொண்ட ஏரிகளை மீட்டெடுப்பதற்காக, அரியலூர் சோழர் பாசனத் திட்டம் என்ற  திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும்.
147. அரியலூர்: சோழர் பாசனத் திட்டம் சாத்தியமானது என்றால், அதற்கான பணிகள் 2023 - 24 ஆம் நிதி ஆண்டிலேயே தொடங்கும். அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
148. தமிழ்நாட்டில் 25 இடங்களில் மணல் குவாரிகளும், 40க்கும் மேற்பட்ட இடங்களில் மாட்டு வண்டி மணற்குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. உழவுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மணல் குவாரிகள் அனைத்தும் வரும் ஜூலை மாதத்திற்குள் மூடப்படும்.
149. 2023-24ஆம் ஆண்டு முதல் 2028-29 வரை நீர்ப்பாசன ஐந்தாண்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படும். இதன்மூலம் தமிழகத்தின் பாசனப் பரப்பை 26.79 லட்சம் ஹெக்டேரிலிருந்து  50 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


பரந்தூர் விமான நிலையம்
150. பரந்தூர் விமான நிலையத்திற்கான விரிவான தொழில்நுட்ப, பொருளாதார அறிக்கைகளை தேர்வு செய்வதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டுள்ளன. விரைவில் அதற்கான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, விமான நிலையத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் இறுதி செய்யப்படும். மத்திய அரசிடம் இருந்து தேவையான ஒப்புதல்கள் பெறப்பட்ட பின், அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.
151. கோவையில் 144 கி.மீ. தொலைவுக்கு ரூ.9,424 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
152. சென்னை விமானம் நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடப்பாண்டில் தொடங்கப்படும்.


153. அரசு ஊழியர் நலன் - மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்
154. புதிய ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
155. அரசு மருத்துவர்களின் ஊதிய முரண்பாடுகள் கலையப்படும். அவர்களுக்கு 05, 09, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்கப்படும்.
156. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களில் நிலவும் முரண்பாடுகள் களையப்படும்.
157. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்.



இவ்வாறு பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.