Tomato: தமிழ்நாட்டில் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


சரிந்த வரத்து - உயர்ந்த விலை:


நாடு முழுவதும் தக்காளியின் விலை உயர்ந்து வருவது மக்களை கவலையடைய செய்துள்ளது. சில தக்காளி பயிரிடும் பகுதிகளில் கனமழை மற்றும் ஜூன் மாதத்தில் இயல்பை விட அதிக வெப்பம் பயிர் உற்பத்தியை பாதித்தது. இதனால் இந்த ஆண்டு விலை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தக்காளி விலை உயர்ந்தாலும், இந்த ஆண்டு விலை உயர்வு அபரிமிதமாக உள்ளது.


கடந்த 3 மாதத்திற்கு முன்பு, ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் என்கிற அளவில் இருந்தது. ஆனால் தற்போதோ தக்காளி விலை விறுவிறுவென உயர்ந்து கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் என்ன சமைப்பது என தெரியாமல் திக்கு முக்காடியுள்ளனர். 


தமிழ்நாடு அரசு நடவடிக்கை


இந்நிலையில், தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதன்படி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்துவது தொடர்பான இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்  நடத்தப்பட்டது.


இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, ”மாநிலம் முழுவதும் செயல்படும் பண்ணை பசுமை அங்காடிகள் மூலம் கூடுதலாக தக்காளி, சிறியவெங்காயம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும் என்றும், வெளிச்சந்தை விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போன்றவை சந்தை விலையைவிட குறைவான விலையில் விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும், நடமாடும் காய்கறி அங்காடிகள் வாயிலாக நகரப் பகுதிகளில் காய்கறிகள் விற்பனை மேற்கொள்ளப்படும்” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 


அதேசமயம், அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுவதைத் கடுமையாகக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை இதில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என்றும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 


மேலும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேளாண் துறை அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும்  கோவிட் காலத்தில் செயல்படுத்தப்பட்டது போல நடமாடும் காய்கறி அங்காடிகளை தற்போதும் தேவைப்படும் இடங்களில் மாநகராட்சி மற்றும் தோட்டக்கலை துறை மூலம் தொடங்க  வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 




மேலும் படிக்க 


CM Stalin Letter To President: முதலமைச்சர் ஸ்டாலின் செய்த சம்பவம்... குடியரசு தலைவர் முர்மு என்ன செய்யப்போகிறார்? ஆளுநரின் அடுத்த மூவ் என்ன?