டோக்கியோ ஒலிம்பிக் ஃபென்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி. ஃபென்சிங் விளையாட்டின் சேபர் பிரிவின் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து பவானி தேவி ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், டோக்கியோவில் இருந்து இந்தியா திரும்பிய அவர், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தார். 


சர்வதேச அளவில், இந்தியா சார்பில் முதல் முறையாக ஃபென்சிங் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை பவானி தேவி படைத்திருந்தார். அதன்பின்னர் தற்போது ஒலிம்பிக் போட்டியிலும் ஃபென்சிங் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனையான இவர், முதல் சுற்றில் வெற்றி பெற்றும் வரலாறு படைத்துள்ளார். சாதனையுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேறிய பவானிக்கு, பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். 


தலைமை செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “வாள் வீச்சில் முதல் முறையாக இந்தியா சார்பில் பங்கேற்றது பெருமை அளிக்கிறது. என்னுடைய விளையாட்டு போட்டிகளை பார்த்ததாகவும் சிறப்பாக விளையாடியதாகவும் முதல்வர் பாராட்டினார். மேலும், விளையாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் எனவும் அடுத்த ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாட வேண்டும் எனவும் முதலமைச்சர் வாழ்த்தினார். தற்போது மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகின்றேன், விரைவில் எனக்கு அரசு பதவி உயர்வு அளிக்கப்படும் என்பதில் நம்பிக்கையாக உள்ளேன்.


முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்து, அந்த போட்டிகளில் பயன்படுத்திய வாளை முதலமைச்சருக்கு பரிசளிக்க விரும்பினேன். ஆனால், முதலமைச்சர் அடுத்த ஒலிம்பிக்கில் சிறப்பாக பங்களிக்க, அதற்கு நன்றாக பயிற்சி எடுக்க அந்த வாளை எனக்கே திருப்பி அளித்தார்” என தெரிவித்துள்ளார். 






முன்னதாக, போட்டி முடிந்த கையோடு தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிவசமாக ஒரு பதிவை பவானி தேவி பகிர்ந்திருந்தார். அதில், ”இன்று, எனக்கு மிகப்பெரிய நாள். உற்சாகமாகவும், உணர்ச்சிவசமாகவும் இருந்தது. என்னால் முடிந்த வரை முயற்சி செய்தேன் ஆனால், வெற்றி பெற முடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் இந்தியர்களே! முடிவில்தானே தொடக்கம் உள்ளது. விடா முயற்சி செய்து, பிரான்சில் நடைபெற இருக்கும் அடுத்த ஒலிம்பிக் தொடரில் நிச்சயம் சிறப்பாக விளையாடுவேன், இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன். என்னோடு துணை நின்ற ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.” என பதிவிட்டு இந்திய பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய விளையாட்டு அமைச்சர், மற்றும் அவருக்கு உதவி செய்த விளையாட்டு அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.