நடிகர் சஞ்சய் தத் முன்விடுதலை குறித்த ஆவணங்களை கோரும் பேரறிவாளனின் மனுவை இறுதி விசாரணைக்கு பட்டியலிட மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத் தண்டனைக் காலம் முடியும் வரை முன்னரே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் மும்பை எரவாடா சிறைத்துறையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் கேட்டபோது, சிறை நிர்வாகம் தகவலை கொடுக்க மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக பேரறிவாளன் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சஞ்சய் தத் முன்னதாக விடுக்கப்பட்டது எப்படி என மகாராஷ்டிரா தகவல் ஆணையம் பதிலளிக்கக் கோரி நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை உள்துறைக்கு கவர்னர் அனுப்பி வைத்தது தொடர்பான ஆவணங்களை சமர்பிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், நடிகர் சஞ்சய் தத் முன்விடுதலை குறித்த ஆவணங்களை கோரும் பேரறிவாளனின் மனுவை இறுதி விசாரணைக்கு பட்டியலிட மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 2013ஆம் ஆண்டு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மும்பை எரவாடா சிறையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு 5 ஆண்டுகளாக சிறைத்தண்டனை குறைக்கப்பட்டு, பல முறை பரோலும் வழங்கப்பட்டது. தனது சிறைவாசம் முடிவதற்கு முன்பாகவே சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார். 256 நாட்களுக்கு முன்பாகவே அவர் விடுதலை செய்யப்பட்டது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவின்பேரில் 30 நாட்கள் பரோல் கடந்த மாதம் 28-ந் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து, சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேலூர், வாணியம்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு அவர் அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில், அவரது பரோல் காலம் அன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அவரை போலீசார் மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது வீட்டில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்து வருவதற்காக அவரது வீட்டில் இருந்து வாணியம்பாடிக்கு அழைத்து வந்திருந்தனர். அப்போது, பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத காலம் பரோல் வழங்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, சிறைக்கு அழைத்துவரச் சென்ற போலீசார், பின்னர் பேரறிவாளனை மீண்டும் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.