ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் ஆடிப் பெருக்கையொட்டி கண்மாய் பகுதியில் சேவல் சண்டை நடத்தப்பட்டது. இந்த போட்டி அனுமதியின்றி நடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கடலாடி போலீசார் அங்கு சென்றனர். போலீசுக்கு பயந்து சேவல் சண்டை போட்டி நடத்தியவர்கள் அங்கிருந்து நாலாபக்கமும் சிதறி ஓடினர். அப்போது பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க விவசாயி ஜோதிநாதன் தடுமாறி கீழே விழுந்ததில் அதே இடத்திலேயே சிறிதுநேரத்தில் பரிதாபமாக இறந்தார்.


விவசாயி ஜோதிநாதனை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட 3 காவலர்கள் தாக்கியதால்தான் என்று கூறி முதுகுளத்தூர்-சாயல்குடி சாலையில் அவரது உறவினர்களும் கிராம மக்களும் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் லயோலோ இக்னேசியஸ், துணை கண்காணிப்பாளர் ஜான் பிரிட்டோ, கடலாடி வட்டாட்சியர் சேகர், ஆய்வாளர்கள் ஜான்சிராணி, மோகன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயி ஜோதிநாதனை உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் 3 காவலர்கள் மதுபோதையில் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக குற்றம்சாட்டியும் உயிரிழந்த ஜோதிநாதனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் காவல் கண்காணிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் ஜோதிநாதன் இறப்பு குறித்து விசாரணை நடத்த கோரி கடலாடி போலீஸ் நிலையத்தையும் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



இதையடுத்து, ஜோதிநாதன் இறப்பு குறித்து முறையான விசாரணை நடைபெறும். அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் ஜோதிநாதன் உடலானது பிரேத பரிசோத்னைக்காக பரிசோதனைக்காக கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜோதிநாதனின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையின்பேரில் உதவி ஆய்வாளர் சரவணன் மதுபோதையில் இருந்தாரா என்பதை அறிய காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டதில் உதவி ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட 3 காவலர்களும் மது அருந்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.


உயிரிழந்த ஜோதிநாதனின் உடலானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இந்த சம்பவம் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த விவசாயி ஜோதிநாதனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினர்களும், கிராம மக்களும் தொடர்ந்து காவல்துறையினரிடம் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடலாடி பகுதியில் சட்டவிரோதமாக அனுமதியின்றி நடத்தப்படும் சேவல் சண்டை போட்டிகளை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.