தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. கலைஞர் மகளிர் உரிமை தொகை, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


அமைச்சரவை கூட்டம்:


இன்றைய அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் காலை 10.30 மணிக்கு தொடங்கியது. அனைத்து துறை அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சுமார் 17 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது இலாகாக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.


செந்தில் பாலாஜி - பொன்முடி:


செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார். இதனை தொடர்ந்து திங்கட்கிழமையன்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இப்படி பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.


இது ஒருபுறம் இருக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அமலாக்கத்துறையினர் மேற்கொள்ளும் சோதனை, ஆளுநரின் செயல்பாடுகள், கலைஞர் மகளிர் உரிமை தொகை, கலைஞர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திற்கு வரவுள்ள புதிய தொழில்கள் மற்றும் தொழில் விரிவாக்கம் ஆகியவற்றுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெங்களூருவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துக்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமலாக்கத்துறையின் அடுத்தடுத்த சோதனை குறித்த கேள்விக்கு, இதெல்லாம் எதிர்ப்பார்த்த ஒன்று தான் இன்னும் இது போன்ற பல கொடுமைகள் நடக்க உள்ளது, அதையும் சந்திகக தயாராக உள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.


மேலும், மத்திய அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு, மத்திய அரசுக்கு கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது. இதனை குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


CM Stalin EXCLUSIVE Interview: ஏபிபி நாடுவுடன் முதல்வர் ஸ்டாலின்! பூரண மதுவிலக்கு முதல் வாரிசின் வளர்ச்சிவரை.. சுளீர் கேள்விகளும் பளீர் பதில்களும்! மெகா எக்ஸ்குளூசிவ்