தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அறிவியல் நகரத் திட்ட துணைத் தலைவராக தேவ் ராகஜ் தேவ், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பு அதிகாரியாக அருண் ராய், சிப்காட் நிர்வாக இயக்குநராக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆகாஷ் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளராக உள்ள அருண் ராய், கூடுதல் பொறுப்பாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நிஷாந்த் கிருஷ்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்து அரசு அறிவித்திருந்தது. ஒவ்வொரு மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை மேம்படுத்தவும், அரசின் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நந்தகோபால் ஐஏஎஸ், திருப்பூர் மாவட்டத்திற்கு ரீட்டா ஹரிஷ் தாக்கரை நியமித்து தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் 3 மாவட்டங்களிலும் மாவட்டங்களில் குடிமராமத்து பணிகள், சாலை மேம்பாடு, அணைகளின் கட்டமைப்பு, கிராமப்புறங்களில் உள்ள நீரிலைகள், ஊரணிகள், கோவில் குடிநீர் தொட்டி, உள்லிட்டவற்றை கண்காணிப்பார்கள் என்றும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் நிலுவையில் இருக்கும் பட்டா மாற்றம், பொறம்போக்கு நிலத்தை பராமரித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சேரும் திடக்கழிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும் பணிகளையும் இந்த அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரு விளக்கு, குடிநீர் குழாய், பழுதடைந்த சாலைகளின் சீரமைப்பு பணிகளையும் அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்றும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், மின் இணைப்பு துண்டிப்பு, பள்ளிகளில் கழிவறை பராமரிப்பது, பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் மதிய உணவு சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளையும் இந்த அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மாவட்டங்களை கண்காணிக்கும் அதிகாரிகள் மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள், திட்டங்களின் செயல்பாடு, குறைகள் குறித்து அரசுக்கு நேரடியாக தெரிவிப்பார்கள் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.