திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன்.  இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மை சீடரும் நெல் ஜெயராமன் தான். தமிழகம் முழுவதும் பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து வந்த நேரத்தில் அதனை மீட்கும் வகையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காட்டுயானம் என்கிற பாரம்பரிய நெல் ரகத்தை நெல் ஜெயராமனிடம் கொடுத்தார்.





 இந்த ஒரு நெல்லிலிருந்து 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த பெருமை நெல் ஜெயராமனை சாரும். குறிப்பாக சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், கருப்புகவுனி, இலுப்பைப்பூ சம்பா உள்ளிட்ட 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த பெருமை நெல் ஜெயராமனை சேரும்.  இதில் பல மருத்துவ குணம் உடைய நெல் ரகங்களும் சாரும். வருடம் தோறும் பாரம்பரிய  நெல் திருவிழாவை தொடர்ந்து நடத்தி வந்தவர் . 12 நெல் திருவிழா இவர் தலைமையில் நடந்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு விழாவிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் ஒரு விவசாயிக்கு ஒரு கிலோ பாரம்பரிய நெல் ரகங்களை கொடுத்து அடுத்த ஆண்டு வரும் பொழுது அதனை இரட்டிப்பாக அவர்களிடமிருந்து பெற்று தமிழகம் மட்டுமின்றி கேரளா ஆந்திரா கர்நாடகா என பல மாநிலங்களில் பாரம்பரிய நெல் விவசாயத்தை கொண்டு சேர்த்த பெருமையும் நெல் ஜெயராமனை சாரும்.




 குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுத்ததற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் கையால் அடிதட்டு மக்களுக்காக பணியாற்றி வருகிறார் என்ற விருதைப் பெற்றார். இதே போன்று தமிழக அரசிடம் இருந்தும் விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றுள்ளார்.  இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2018ம் ஆண்டு 6ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் நெல் ஜெயராமன். 




இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக அரசு நீடாமங்கலத்தில் நெல் ஜெயராமன் பெயரில் நெல் பாதுகாப்பு மையம் தொடங்கப்படும் எனவும் அறிவித்தது. நெல் ஜெயராமன் உயிர் இழந்தாலும் அவருடைய எண்ணமான, பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சி தொடர வேண்டும் என்கிற நோக்கில் சில இளைஞர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிகள்.