ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றியை தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் களமிறங்கப்போவதாக உற்சாகத்தோடு அறிவித்திருக்கிறது நடிகர் விஜய்யின் 'விஜய் மக்கள் இயக்கம்'. கவனத்தை ஈர்க்க தொடங்கியிருக்கும் விஜய் மக்கள் இயக்கத்திற்கான அரசியலின் மூலதனமே விஜய்யின் சினிமா கரியர்தான். விஜய் படங்கள் எப்படியெல்லாம் அரசியல் பேசியிருக்கின்றன விஜய் தனக்கான அரசியல் இமேஜை படங்கள் வழியாக எப்படி கட்டியெழுப்பியிருக்கிறார் என்பது குறித்த ஒரு அலசல் இங்கே..

 

தமிழ்சினிமாவும் அரசியலும் எப்போதும் சேர்ந்தே இருப்பவை. கடந்த அரை நூற்றாண்டில் கோலிவுட்டை சேர்ந்தவர்கள்தான் கோட்டையில் அதிக முறை கொடியேற்றியிருக்கிறார்கள். ஆனால், அதேவேளையில் சினிமாக்காரர்கள் என்பதற்காகவே மக்கள் எல்லாருக்கும் அரசியல் அடையாளம் கொடுத்துவிடவும் இல்லை. அரசியலில் சொதப்பி காணாமல் போன சினிமாக்காரர்களும் தமிழக வரலாற்றில் குறைவில்லாமலே இருக்கிறார்கள்.

 

அரசியலில் வெற்றிபெற்ற நட்சத்திரங்கள் எல்லாருமே சினிமாவை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தியிருக்கின்றனர். தங்களுடைய கொள்கைகள் அரசியல் விருப்பு வெறுப்புகள் அத்தனையையுமே தங்களின் படங்கள் வழியே மக்களுக்கு தொடர்ந்து கடத்திக்கொண்டே இருந்திருக்கின்றனர். 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' 'நான் செத்து பிழைச்சவண்டா' போல எம்.ஜீ.ஆர்  பல பாடல்களில் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியிருப்பார். பல பாடல்களில் அண்ணாவின் புகழை பாடியிருப்பார். சூரியன் உதயமாகிற ஒரு காட்சி பெரும்பாலான படங்களில் இடம்பெற்றிருக்கும். இப்படி தன் கையிலிருக்கும் சினிமாவை வைத்து தனக்கான அரசியல் அஸ்திவாரத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டே இருந்தார் எம்.ஜீ.ஆர்.

 

அதேமாதிரிதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தன்னுடைய பல படங்களில் அரசியல் சாட்டையை சுழற்றியிருப்பார். அண்ணாமலையில் தொடையை தட்டி 'அசோக்...இந்த நாளே உன் காலண்டர்லே குறிச்சு வச்சிக்கோ' என சவால்விடும் காட்சியாகட்டும், படையப்பாவில் நீலாம்பரி கேரக்டர் ஆகட்டும் இதையெல்லாம் யாரை மனதில் வைத்து எழுதியிருந்தார்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. 'உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன். முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். வெறும் ஏணியாய் நானிருந்து ஏமாற்றமாட்டேன்' போல பல பாடல்களில் ரஜினியின் அரசியல் வருகைக்கு முன்னோட்டம் விடப்பட்டிருக்கும். அது கடைசியில் ஆண்டி க்ளைமாக்ஸாக முடிந்தது காலம் செய்த கோலம்.

 



எம்.ஜீ.ஆர், ரஜினி வரிசையில் இப்போது விஜய் ஒரு உச்சத்தை அடைந்திருக்கிறார். விஜய்க்கும் அரசியல் அபிலாஷைகள் உண்டு. விஜய்யும் தன்னுடைய படங்களில் தொடர்ந்து அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார். விஜய் ஒரு சைக்கிளை ஓட்டி வந்தாலே அரசியல் சாயம் பூசும் அளவுக்கு இன்றைய நிலைமை இருக்கிறது.

 

விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்திலேயே எஸ்.ஏ.சி தனது அரசியல் வித்தையை காண்பித்திருப்பார். 'காமராஜர், கலைஞர், எம்.ஜீ.ஆர், ஜெயலலிதா என எந்த கட்சியையும் பகைக்காமல் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு ஊர் எங்கும் பேர் வாங்க அவர்கள் போல நாமும் உழைக்க வேண்டும் என பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கும். அதேமாதிரி, படத்தில் விஜய்யின் வீட்டின் சுவற்றில் ஒரு புறம் இரட்டை இலையும் இன்னொரு புறம் உதயசூரியனும் ஓவியமாக வரையப்பட்டிருக்கும். அறிமுக நாயகனாக யார் என்றே தெரியாத ஒரு ஒருவர் அறிமுகமாகும் படத்தில் இந்த குறியீடுகளெல்லாம் தேவையே இல்லை. ஆனால், கலைஞரின் அனுதாபியான எஸ்.ஏ.சி மகனின் வளர்ச்சிக்காக  தன்னை பொதுவானவராக காட்டிக்கொள்ள இப்படி செய்திருப்பார்.

 

இதன்பிறகு, விஜய்யின் ஆரம்பகால படங்களில் பெரிதாக எந்த அரசியலும் இருந்ததாக தெரியவில்லை.

 

வளர்ந்து வரும் நடிகர் என்ற இடத்திலிருந்து ஒரு மாஸ் ஹீரோவாக விஜய் பரிணமிக்க முயற்சி செய்து கொண்டிருந்த காலக்கட்டத்திலிருந்துதான், தொடர்ச்சியாக சமூகப்பிரச்சனைகளையும் சில அரசியல் நையாண்டிகளையும் விஜய் பேச ஆரம்பித்தார்.

 

2002, காவிரி பிரச்சனை பற்றியெரிந்து கொண்டிருந்த காலக்கட்டம். மொத்த திரையுலகமும் பாரதிராஜா தலைமையில் ஒரு பக்கமும் ரஜினி தலைமையில் ஒரு பக்கமுகாக உண்ணாவிரதம் இருந்து கொண்டிருந்தது. இந்த சமயத்தில் வெளியான யுத் படத்தில் காவிரி பிரச்சனை பற்றி இரண்டு மூன்று காட்சிகளில் வசனம் பேசியிருப்பார் விஜய். 'இப்டி டீக்கடையில உட்காந்து வெட்டியா ஊர் ஞாயம் பேசிக்கிட்டு இருக்றதுனாலதான் குடிக்க தண்ணீ கூட கிடைக்காம இருக்கோம்' என ஒரு காட்சியிலும் 'இந்த உலகத்துல காத்து, தண்ணீ, வானமெல்லாம் எல்லாருக்கும் பொது. அதை உனக்கு தரமாட்டேன்..விடமாட்டேன்னு பக்கத்து ஸ்டேட்காரன் மாதிரி பேசாதீங்கய்யா' என  விமர்சித்திருப்பார்.

 

யுத் வெளியான அதே ஆண்டில் வெளிவந்த தமிழன் படத்தில் மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டம் பற்றி பேசப்பட்டிருக்கும். ஆனால், படத்தில் மாஞ்சோலை என்பது 'பூஞ்சோலை' என மாற்றப்பட்டிருக்கும். இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியவர் எஸ்.ஏ.சி என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதன்பிறகு திருமலை, கில்லி, சிவகாசி, திருப்பாச்சி என தொடர்ந்து ஹிட்களை கொடுத்து விஜய் மாஸ் ஹீரோவாக நிலைப்பெற்றுவிட்டார். விஜய்க்கென்று  அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய ஒரு மெகா ரசிகர் கூட்டம் சேர்ந்துவிட்டது. விஜய் என்கிற பிம்பம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டாக்க தொடங்கியது. விஜய்யின் ஓப்பனிங் பாடல்கள் இதன்பிறகுதான் கருத்து பேச ஆரம்பித்தன. அதற்கு முக்கிய காரணம் பாடலாசிரியர் கபிலன். விஜய்க்கு கபிலன் எழுதிய ஓப்பனிங் பாடல்கள்  சமூகப்பிரச்சனைகளையும் அரசியலையும் பிரதானமாக பேசியது.

 

'சேரி இல்லா ஊருக்குள்ள பிறக்கவேணும் பேரப்புள்ள....தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து, இதுதான் என் கருத்து' என விஜய்யே பேசுவது போல் போக்கிரி பொங்கல் பாடலில் வரிகளை எழுதியிருப்பார் கபிலன். விஜய், பிரபுதேவா, கபிலன் இதே கூட்டணி மீண்டும் இணைந்த வில்லு படத்தின் ஓப்பனிங் பாடலும் முழுக்க முழுக்க சமூகப்பிரச்சனைகளையும் அரசியலையும் மட்டுமே பேசியிருக்கும்.

 

இலங்கையில் இறுதிப்போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது வில்லு படத்தில் 'ஆண்டவந்தான் என்ன பார்த்து என்ன வேணும் என்று கேட்டா 'அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்' என ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக விஜய்யை பாட வைத்திருப்பார் கபிலன். அந்த சமயத்தில் விஜய்யும் ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் கொஞ்சம் தீவிரமாகவே கவனம் செலுத்தியிருந்தார். நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் தன்னுடைய ரசிகர்கள் அனைவரையும் கூட்டி உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டிருந்தார். இதே பாடலில் பாரதியார், கார்ல்மாக்ஸ், பெரியார் ஆகியோரை பற்றியும் பாடப்பட்டிருக்கும்.

 

'ஆலமரம் பள்ளிக்கூடம் ஆக்ஸ்ஃபோர்டா மாறனும். நீ தாய்மொழியில் கல்விக்கற்று தமிழ்நாட்ட வளர்க்கனும்

 

உணவு, உடை, இருப்பிடம் உழவனுக்கும் கிடைக்கனும் அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கு படைக்கனும்'  என வேட்டைக்காரனின் நா அடிச்சா தாங்கமாட்ட பாடலும் முழுவதும் சமூகக்கருத்துக்களையே பேசியிருக்கும். இதே பாடலில்,

'வரட்டி தட்டும் சுவற்றுல வேட்பாளர் முகமடா...காத்திருந்து ஓட்டு போட்டு கறுத்து போச்சு நகமடா' என பொதுவாக எல்லா அரசியல்வாதிகளையும் சேர்த்து ஒரு வாரு வாரியிருப்பார் கபிலன்.

 

எம்.ஜீ.ஆர் தத்துவப்பாடல்களை போன்று விஜய்க்கும் ஒரு ப்ளேலிஸ்ட் இருக்க பாடலாசிரியர் கபிலன் ஒரு முக்கியக் காரணமாக இருந்தார்.

 

இது வரை சமூக பிரச்சனைகளை மட்டுமே பிரதானமாக பேசிக்கொண்டிருந்த விஜய் இதன்பிறகு கொஞ்சம் மாறி தன்னுடைய தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளையும் ஒரு கட்டத்தில் பேச ஆரம்பித்தார்.

 

2011 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அந்த தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியும் பெற்றிருந்தது. இந்த வெற்றிக்கு பிறகு வெளியான விஜய்யின் 'வேலாயுதம்' படத்தில் அரசியல் நெடி பயங்கரமாக வீசியிருக்கும். வழக்கம்போல ஓப்பனிங் பாடலில் 'வரப்ப மிதிச்சு ராப்பகலா உழைச்சு வாழுற ஜனங்க நம்ம கட்சி' என ஏழைப்பங்காளனாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பார் விஜய். ஒரு காமெடி காட்சியில் விஜய் வீட்டுக்கூரையின் மீது ஓடும் போது ஒரு கட்சிக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருப்பவரின் தலையில் ஓட்டை தட்டிவிட்டுவிடுவார். உடனே அந்தக் கட்சிக்காரர் 'இது எதிர்க்கட்சியின் சதி' என கூற 'நல்ல வேள நா ஆளுங்கட்சி' என போகிற போக்கில் சொல்லியிருப்பார் விஜய்.

 

அதேபடத்தில் ஊரே சேர்ந்து விஜய்யை சென்னைக்கு ட்ரெயின் ஏற்றிவிடுவது போன்ற இன்னொரு காட்சியில் தனி ரூட் பிடித்திருப்பார்.

 

 'அவரு யாரு தெரியுமா....எங்க மன்மோகன் சிங்குய்யா, இந்த மண்ணோட சிங்கம்ய்யா...இந்த மண்ண ஆண்டவரு எங்க மனச ஆண்டவரு இந்த மாநிலத்தையே.......என துணை கதாபாத்திரம் ஒன்று வசனம் பேசி முடிவதற்குள் விஜய் குறுக்கே புகுந்து தடுத்திருப்பார். 

 

இதே படத்தில் 'இரத்தத்தின் இரத்தமே...என் இனிய உடன்பிறப்பே' என ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். அரசியல் தெரியாதவர்களுக்கு மட்டுமே இது தங்கச்சி செண்டிமெண்ட் பாடலாக தெரியும். ஆனால்,  இதை எதோ போகிற போக்கில் எழுதப்பட்ட வரிகளாக  பார்க்க முடியாது. இந்த பாடலை எழுதியவர்  அண்ணாமலை. பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் உடையவர். நூற்றுக்கணக்கான பாடல்களையும் எழுதியிருக்கிறார். அரசியல் பற்றி அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் 'இர.இர க்களையும் உ.பிக்களையும்' ஒன்றிணைத்து கலகம் செய்திருப்பார். விஜய் ஆளுங்கட்சியா?எதிர்க்கட்சியா?? தனிக்கட்சியா?? இல்லை எல்லாருக்கும் பொதுவானவரா என பல குழப்பங்களை இந்த படத்தின் வசனங்களும் பாடல்களும் ஏற்படுத்தியிருக்கும்.

 

வேலாயுதம், நண்பன், துப்பாக்கி என விஜய்யின் கரியர் மீண்டும் சூடுபிடித்து ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருந்த போதுதான் 'தலைவா - Time to lead' பிரச்சனை உதயமானது. இந்த படத்திற்கு ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்து  படங்களில் வெளிப்படையாக தனது அரசியல் விருப்பு வெறுப்புகளை பேசுவதை விஜய் குறைத்துக் கொண்டார்.

 

ஆனால், இதன்பிறகு தனது படங்கள் எல்லாமே எதோ ஒரு சமூகப்பிரச்சனையை பேசுவதாக இருக்க வேண்டும். அந்த பிரச்சனைகள் சார்ந்த அரசியலும் படத்தில் பேசப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் விஜய். கத்தியில் விவசாயிகள் பிரச்சனையை பிரதானமாக எடுக்கப்பட்டிருக்கும். முக்கியமான ப்ரஸ்மீட் காட்சியில் 2G பற்றி ஆவேசமாக வசனம் பேசியிருப்பார். ஒரு கூல்ட்ரிங்ஸ் கம்பெனியை எதிர்த்து இந்த படத்தில் விஜய் கொந்தளித்திருப்பார். ஆனால், பல வருடங்களுக்கு முன்பு அந்த கம்பெனியின் விளம்பரப்படங்களில் நடித்திருந்ததே விஜய்தான். அதுமட்டுமில்லாமல் படங்களிலும் கிடைக்கிற கேப்பிலெல்லாம் அந்த கூல்ட்ரிங்ஸுக்கு விளம்பரம் செய்திருப்பார். இது கத்தி படம் வெளியான போது பலத்த விமர்சனத்துக்குள்ளானது. ஆனால், விஜய் இந்த தவறை உணர்ந்து வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டு இந்த சர்ச்சையை சுமூகமாக முடித்து வைத்தார். முட்டி மோதி மல்லுக்கட்டுவது மட்டுமில்லை. தக்க நேரத்தில் பின்வாங்குவதும் பணிந்து போவதும் கூட அரசியலே!

 

புலி படத்தில் கொடுங்கோன்மை மிக்க வில்லியாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். நீலாம்பரி கேரக்டருக்கு சொல்லப்பட்ட கதைகள் இங்கேயும் சொல்லப்பட்டது. ஆனால், அதெல்லாம் ஒரு கான்ஸ்பிரசியாகவே கடந்து போனது. ஆனால், அதே 'புலி' படத்தின் ஆல்பத்தில் மனிதா...மனிதா என்றொரு பாடல் இடம்பெற்றிருக்கும். இது ஈழத்தமிழர்களை மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல் போன்றே தோன்றும்.

'கூட்டுப் பறவைகளாய் இந்தக் காட்டில் பிறந்தோம் கை வீசி திரிந்தோம்...சிந்தும் வேர்வையினால் நவதானியம் விளைந்தது நம்மாலே

 

திசையெட்டும்

திசையெட்டும் தெறிக்கட்டும்

திறக்கட்டும் புறப்படு புலி இனமே' போன்ற வரிகள் ஈழத்தமிழர்களின் வலிகளையும் எழுச்சியையும் பேசுவதாகவே அமைந்தது. தொடர்ந்து ஈழமக்களுக்கு ஆதரவான விஷயங்களை படங்களில் வெளிக்காட்டியதன் மூலம் விஜய்யின் மீதான 'தமிழர்..தமிழ்ப்பாற்றாளர்' என்கிற இமேஜ் இன்னும் கூடியது.

 

இதைத் தொடர்ந்து மெர்சலில் 

'ஆளப்போறான் தமிழன்' என விஜய் கைகளை உயர்த்த அந்த இமேஜ் பலமடங்கு அதிகரித்தது. மேலும், இதுவரை இளையதளபதி யாக இருந்த இந்த படத்தின் மூலமே 'தளபதி' விஜய்யாக ப்ரமோட் ஆனார்.

 

மெர்சலில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி வசனம் மத்தியில் ஆளும் கட்சியை சூடாக்கியது. அந்த கட்சிக்காரர்கள் விஜய்யின் மத அடையாளத்தையெல்லாம் பொதுவெளியில் எடுத்துப்போட, முதன் முதலாக தன்னை 'ஜோசப் விஜய்' என அடையாளப்படுத்தி விஜய் வெளியிட்ட அறிக்கை பலருக்கும் சவுக்கடியாக அமைந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு, மைக்கேல் ராயப்பனாகவும் ஜே.டி என்கிற ஜான் துரைராஜாகவும் தொடர்ந்து சிறுபான்மையினரின் பெயர்கள் தாங்கிய கேரக்டர்களில் துணிச்சலாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார் விஜய்.

 

சர்காரில் தமிழகத்தின் அப்போதைய ஆளுங்கட்சியை கீறிப்பார்க்க, அந்த கட்சியின் தொண்டர்கள் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்துமளவுக்கு சென்றனர்.

 

ஒரு மாஸ் ஹீரோவாக பரிணமித்துவிட்ட பிறகு அத்தனை படங்களிலும் எதோ ஒரு சமூகப் பிரச்சனையையோ அரசியல் பிரச்சனையையோ விஜய் பேசியிருக்கிறார்.

இதெல்லாம் கதைக்கு தேவைப்பட்டது அதனால் வைத்தோம் என இந்த படங்களின் இயக்குனர்கள் ஜல்லியடிக்கலாம். ஆனால், அதில் பெரிதாக உண்மையிருப்பதில்லை என்பதே நிதர்சனம். 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' என எம்.ஜீ.ஆர் க்கு 200% திமுக வை நினைத்துதான் எழுதினேன் என கவிஞர் வாலி பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். 'உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன். வெறும் ஏணியாய் நானிருந்து ஏமாற்றமாட்டேன்' போன்ற வரிகளை கவிஞர் வைரமுத்து ரஜினியை தவிர வேறு யாருக்காவது எழுதிவிட முடியுமா?? அப்படி எழுதியிருந்தால் அது பொருந்திதான் போயிருக்குமா?? 

 

எந்த இமேஜும் இல்லாத வளர்ந்து வரும் நடிகர்களுக்கு மட்டுமே பாடல்கள் வசனங்கள் எல்லாம் கதை சார்ந்து மட்டுமே இருக்கும். ஒரு பெரும் பிம்பமுடைய அரசியல் அபிலாஷைகள் உடைய நாயகர்களுக்கெல்லாம் அந்த பிம்பத்துக்காக மட்டுமே  திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் உருவாக்கப்படுகிறது. மேலும், இங்கே ஹீரோக்களின் அனுமதி இல்லாமல் ஒரு ஷாட் கூட படங்களில் இடம்பெற்றுவிட முடியாது. அப்படியிருக்கையில், இந்த மாதிரியான அரசியல் சர்ச்சைகளை இயக்குனர்களின் கற்பனை என்றளவில் சுருக்கிவிடுவது சரியாக இருக்காது.

 

மெர்சல் படத்திற்காக ஒரு பத்திரிகை சார்பில் விஜய்க்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்ட போது அந்த நிகழ்ச்சியில் 'ஒரு செயல செஞ்சா அது மூலம் நமக்கு நல்லது நடந்தா சந்தோஷம்தான். ஆனா, அதே செயல் மூலம் நம்ம சுத்தியிருக்குறவங்களுக்கும் நல்லது நடந்தா அதுதான் சரியானதும் கூட. அதனாலதான் எந்த பிரச்சனை வந்தாலும் பரவாயில்லன்னு இந்த மெர்சல் படத்துல சில வசனங்கள் பேசுனேன்' என விஜய் பேசியிருப்பார். இது ஒரு ஸ்டேட்மெண்ட். படத்தில் வெளியாகும் ஒவ்வொரு பாடல் வரியும் ஒவ்வொரு வசனமும் காட்சியும் என்ன தாக்கத்தையும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தும் என்பது நடிகர்களுக்கு தெரிந்தே இருக்கிறது. அப்படி தெரிந்த பிறகும் தொடர்ச்சியாக அரசியல் பேசுகிறார்கள் எனில் அவர்கள் வேறொரு பயணத்துக்கும் தயாராக இருக்கிறார்கள் என்றே அர்த்தம். விஜய்யும் அப்படியே! மக்களின் அபிமானத்தை பெற்ற பிறகு ஒவ்வொரு படத்திலுமே விஜய் தனக்கென ஒரு அரசியல்மய பிம்பத்தை விதைத்துக் கொண்டே வந்தார். அது விருட்சமாகி இப்போது உள்ளாட்சித் தேர்தல் வரை படர்ந்திருக்கிறது.

 

ஆனால், கடைசியாக நடித்த மாஸ்டர் படத்தில் 'கட்சி ஆரம்பிக்குறேன்...சேர்ந்துக்குறீங்களா? என பவானி கேட்க பதிலுக்கு ஜே.டியான விஜய் வாயில் விரல் வைத்து ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........என அமைதியா இருங்களேண்ட்டா என்பதை போல சொல்லி பவானியை தலைகீழாக கட்டி தொங்கவிட்டிருப்பாரே!

 

ஒரு வேள அப்டி இருக்குமோ.....?!

 

எப்டி...?!

 

அதை விஜய் தான் சொல்லனும்!