தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


அடுத்த 3 மணிநேரம்:


இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவிழக்கக்கூடும். இதன் காரணமாக  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 29 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 






இதேபோல் டிசம்பர் 30 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருப்பூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர, மதுரை, திண்டுக்கல் மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்புள்ளது. 


சென்னையில் மழை பெய்யுமா? 


சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


27.12.2022: குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60   கிலோ மீட்டர் வேகத்தில்    வீசக்கூடும்.  


28.12.2022: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60   கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.