சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பதை அடுத்து உலக நாடுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ள நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.



 

இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா உள்ளிட்ட எந்த வைரசாக இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் எளிதாக உடலில் தொற்றிக்கொள்ளும். அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானங்களை, தமிழக அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை அறிமுகம் செய்துள்ளது. கடந்த காலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தபோது, இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.



 

 இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா சிகிச்சைப்பிரிவு மருத்துவர் நாகராணி கூறியதாவது,”கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வதற்காகவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் இயற்கை மருத்துவத்தில் வழிமுறைகள் உள்ளன. அதாவது, நாட்டு நெல்லிக்காய் -½ துண்டு(50 மிலி), துளசி -20 இலைகள்( 50 மிலி), இஞ்சி - ¼ துண்டு(10 மிலி), எலுமிச்சை- ¼ துண்டு(5 மிலி), மஞ்சள் தூள்(சிறிதளவு), தண்ணீர் 150 மிலி ஆகியவைற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து பருக வேண்டும். பெரியவர்கள் 250 மிலி, சிறியவர்கள் 100 மிலி, ஒரு நாளைக்கு இரண்டு வேளை பருக வேண்டும்.

 



இதுபோல், சூடான பானமும் இருக்கிறது. இஞ்சி அல்லது சுக்கு சிறிய துண்டு( 5 கிராம்), மிளகு( சிறிதளவு), அதிமதுரம்( சிறிதளவு), மஞ்சள் பவுடர்( சிறிதளவு), தண்ணீர் 250 மிலி, இவைகளை ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம். பெரியவர்கள் 50 மிலி, சிறியவர்கள் 20 மிலி பருகலாம். இதற்கான மொத்த பொட்டலத்தை அரசு வழங்குகிறது. டீ தயார் செய்வதுபோல் தயார் செய்து பருகலாம். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இந்த நோய் எதிர்ப்பு பானத்திற்கான பொட்டலம் உள்ளது. தேவைப்படுபவர்கள் நேரில் வந்து வாங்கி கொள்ளலாம்.



 

இது தவிர, முகத்திற்கு ஆவிபிடித்தல் முக்கியமானது. அதற்கும் தனியான நீராவி எந்திரம் உள்ளது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 8 நீராவி எந்திரங்கள் உள்ளன. அதன் மூலம் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி எளிதாக நீராவி பிடிக்கலாம். காலை,மாலை வெறும் வயிற்றியல் வஜ்ராசனம், பத்மாசனம், சஷங்காசனம் போன்ற யோகா பயிற்சிகளை செய்யலாம். எளிதான மூச்சு பயிற்சிகளான, அனுலோமா, விலோமா எனப்படும் மூச்சை உள்ளே இருந்து வெளியே விடவும்( 10 முறை).

 

3 நிமிடங்கள் உள்ளே இழுத்து 3 நிமிடங்கள் மூச்சை வெளியே விடவும். பிராமரி பிராணயாமம் எனப்படும் மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடும் முன் காதை ஆள்காட்டி விரலால் அனைத்து தலைமை முன்னோக்கி வளைத்து "ம்" என்ற சப்தத்துடன் மூச்சை வெளியே விட வேண்டும். கைகளை முன், பின் இழுத்து கொண்டு மூச்சை உள்ளடிக்கி வெளியே விடுவது, உடலையும் மனதையும் தளர்வாக்கும் பயிற்சியான பாதத்தில் தொடங்கி மேல் நோக்கி ஒவ்வொரு பாகமாக இறுக்கம் செய்து தளர்வாக்குதல் போன்ற பயிற்சிகள் பலனளிக்கும் “இவ்வாறு அவர் கூறினார்.