TN Rain Alert: மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் இடையே, பலத்த புயலாக டாணா புயல் கரையை கடந்துள்ளது.


கரையை கடந்த ”டாணா புயல்”


வங்கக் கடலில் உருவான டாணா புயல் ஒடிசாவின் பிதர்கனிகா - தாம்ப்ரா இடையே கரையை கடந்தது. நள்ளிரவு 12 மணியளவில் இருந்து பலத்த காற்றுடன் புயல் கரையை கடக்க தொடங்கியது. அப்போது மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்தன. 5 மணி நேரத்திற்கும் மேலாகா புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஹவுரா கட்டுப்பாட்டு மையத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரவு முழுவதும் தங்கியிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். முன்னெச்சரிக்கையாக லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், புயல் பாதிப்புகள் முழுமையாக விடிந்தால் தான் தெரிய வரும்.


பள்ளிகளுக்கு விடுமுறை:


இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று ஒருநாள் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


வானிலை மையம் எச்சரிக்கை:


மண்டல வானிலை மைய அறிக்கையின்படி, “தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, 


25.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


26.10.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


27.19.2024 முதல் 30.10.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை &புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்:  25-10-2024 காலை வரை குறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 79 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். எனவே, அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.