தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலூரில் உள்ள நறுவி மருத்துவமனையில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.


முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு விழாவுக்காக சென்னை வருவதற்கு ரயில் நிலையம் வந்துள்ளார். வந்தே பாரத் ரயிலில் ஏற முயன்றபோது அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. 


அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிந்து அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். 


யார் இந்த துரைமுருகன்?


86 வயதான துரைமுருகன், அன்றைய வட ஆற்காடு மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள காங்குப்பம் கிராமத்தில்1938-ஆம் ஆண்டு விவசாயியான துரைசாமிக்கு மகனாக பிறந்தார். அவருக்கு பெற்றோர் முதலில் வைத்த பெயர் முருகன் என்பதுதான்.


பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது தனது தந்தை துரைசாமியின் முதல் எழுத்தை சேர்த்து து. முருகன் என ஆசிரியர்கள் அழைத்ததை சக நண்பர்கள் கேலி செய்ய தொடங்கினர். இதனால் ஆங்கிலத்தின் தனது ஊரான காங்குப்பத்தின் பெயரையும் தனது தந்தையின் பெயரையும் சேர்த்து K.D. முருகன் என மாற்ற நினைத்தார்.


ஆனால், தமிழில் அந்த பெயரை எழுதும்போதும் பேசும்போதும் கே.டி.முருகன் என வரும் என்பதால் தனது தந்தையிடம் இருந்து துரை என்ற வார்த்தையை தனது பெயரான முருகனுடன் இணைத்து துரைமுருகன் ஆனார்.


தனது கல்லூரி காலத்தில் 1965ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்ட துரைமுருகன், 1971 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நடந்த 13 தேர்தல்களில் போட்டியிட்டு 11 முறை வென்று தற்போதய சட்டப்பேரவையின் மிக மூத்த உறுப்பினராக உள்ளார். 


1989, 1996, 2006 ஆண்டுகளில் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், சட்டத்துறை அமைச்சராகவும் இருந்த துரைமுருகன், தற்போது அமைந்துள்ள ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக உள்ளார்.


தனது 16 வயதில் திமுகவின் கிளைக்கழக செயலாளராக தொடங்கிய துரைமுருகனின் அரசியல் பயணம் 86-ஆவது வயதில் திமுகவின் அதிகாரம் மிக்க பொறுப்புகளில் ஒன்றான பொதுச்செயலாளராக தொடர்கிறது.  


இதையும் படிக்க: ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!