சென்னையில் அடுத்த 3 மணி நேரங்களுக்குள் இரண்டு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது எதிர்பாராத சமயம் மிதமான மழை முதல் கனமழை வரை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை பெய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் இரவில் உஷ்ணம் இன்றி குளிர்ந்த சூழலே நிலவுகிறது. இனி அடுத்து வரும் 2 மாதங்களுக்கு மழை காலம் என்பதால் பெரிய அளவில் வெயிலின் தாக்கம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 


இப்படியான நிலையில் இன்று அதிகாலை சென்னையில் ஒரு சில இடங்களில் தூறலுடன் கூடிய இலேசான மழை பெய்தது. இதனால் அதிகாலை நேரம் வெளியே சென்ற மக்கள் சற்று சிரமத்திற்கு உள்ளாயினர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதில், காலை 8 மணிக்குள் செய்யூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. இதேபோல் 9 மணிக்குள் திருக்கழுகுன்றம், கும்மிடிப்பூண்டி,கிண்டி,வேளச்சேரி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளதால் காலை நேரம் பணிக்கு செல்பவர்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் பயணங்களை திட்டுமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 






பிற இடங்களில் மழை தொடருமா? 


முன்னதாக தமிழக கடலோரப்பகுதிகளின் மேல்  நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக்டோபர் 16) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.நகரின் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.