தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று (டிசம்பர் 1) காலை 05.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து காலை 08.30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 760 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 780 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 960 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 940 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது இன்று (டிசம்பர் 2) மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை (டிசம்பர் 3) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பின் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4 ஆம் தேதி மாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் சென்னைக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது.
இப்படியான நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “இன்று (டிசம்பர் 2) காலை 9 மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு” இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், “விழுப்புரம்,ராணிபேட்டை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர்,ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு” இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இன்று மற்றும் நாளை வானிலை நிலவரம்
டிசம்பர் 2 ஆம் தேதியான இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (டிசம்பர் 3) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.