Aavin Ghee: கிறிஸ்துமஸ் , புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  நாளை முதல் ஆவின் நெய் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. 


ஆவின் நிறுவனம்:


தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின்  பால் மற்றும் பால் உபபொருட்களை விற்பனை செய்து வருகிறது. பால் உபபொருட்களான நெய், வெண்ணெய், தயிர் , பனீர் , ஐஸ்கிரீம் மற்றும் நறுமண பால் வகைகளை 1000க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, பண்டிகை காலங்களில் தள்ளுபடி விலையிலும் பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது கிறிஸ்துமஸ்,  புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் வர உள்ளதால், தள்ளுபடியை ஆவின் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதன்படி, ஆவின் நெய்யினை தள்ளுபடி விலையில் நாளை முதல் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


தள்ளுபடி விலையில் ஆவின் நெய்:


இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பண்டிகை காலங்களை முன்னிட்டு ஆவின் நெய் தள்ளுபடி விலையில் விற்பனை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் பொதுமக்கள் தேவையை அறிந்து பல்வேறு வகையான பால் உபபொருட்களான நெய், வெண்ணெய், தயிர் , பனீர் , ஐஸ்கிரீம் மற்றும் நறுமண பால் வகைகளை 1000க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி விற்பனை செய்து வருகிறது. மேலும் பால் உபபொருட்களின் விலையிலும் தரத்திலும் பொதுமக்கள் விரும்பும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பண்டிகை காலங்களில் பொதுமக்களிடையே ஆவின் பால் உபபொருட்களுக்கான தேவை தொடர்ந்து  அதிகரித்த வண்ணம் உள்ளது.


அவ்வகையில் பொதுமக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் ஆவின் நெய்யினை எதிர்வரும் கிறிஸ்துமஸ் , புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 02.12.2023 முதல் 20.1.2024 வரை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50/- தள்ளுபடி செய்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.  எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த அதிரடி தள்ளுபடி விலையில் ஆவின் நெய்யினை பெற்று பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


இன்று முதல் ஊதா நிற ஆவின் டிலைட் பால் விற்பனை:


சென்னையில் 200 மில்லி லிட்டர் ஊதா நிறப் பால் பாக்கெட்டுகளை இன்று முதல் ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது.  இதில் கொழுப்பு சத்து அளவு 3.5 சதவீதம் ஆக உள்ளது. சோதனை முயற்சியாக 10 ரூபாய்க்கு பால் பாக்கெட்டை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த பால் பாக்கெட்டுகள் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று முதல் விற்பனையாகிறது. இந்த ஊதா நிற டிலைட் பால் அனைத்து வயதினரும் பருகும் வகையில், செறிவூட்டப்பட்டு 3.5 சதவீத கொழுப்புடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.