தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 


தென்இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 


அதன்படி நேற்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும்  கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது.






இந்நிலையில் இன்று மழை தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று (டிசம்பர் 17) காலை 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இலேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேசமயம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இலேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில், திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்ல பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. அதேசமயம் களக்காடு தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, சூழல் சுற்றுலா பகுதிகளில் பார்வையிட மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், செட்டிக்குளம், ராமன் புதூர், கோணம், ஆசாரிப்பள்ளம், கோட்டார், குமரி முனை, அஞ்சு கிராமம், மைலாடி, கொட்டாரம், அகஸ்தீஸ்வரம் , சுசீந்திரம் தேரூர், ஆரல்வாய்மொழி, பார்வதி புரத்திலும் மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை ஆலங்குளம், பாவூர்சத்திரம், ஊத்துமலை, குற்றாலம் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.