நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்லில் இந்தியில் எழுதினால் இந்தித் திணிப்பு என்று கூறும் திமுக, பொங்கல் தொகுப்பு பொருட்களின் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டு இருப்பது எந்த வகையில் நியாயம்? என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். 


பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தொகுப்பில் 21 சமையல் பொருட்கள் துணிப்பையில் கொடுக்கப்படுகின்றன. இந்தப் பொருட்களில் நன்றாக இல்லை என்று பொதுமக்கள் கூறுவது போல  சமூகவலைதளங்களில் வீடியோ வைரலானது. இதனைத்தொடர்ந்து, மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.


இதனிடையே, பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்களின் பாக்கெட்டுகள் மீது இந்தியில் எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பான புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.


இந்த நிலையில், தமிழ்மீது மிகுந்த பற்றுடையது போல் காட்டிக்கொள்ளும் திமுக, தமிழர் திருநாளான பொங்கலையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பு பொருட்களை வடமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்திருப்பதும், அப்பொட்டலங்களில் இந்தி வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.




இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்லில் இந்தியில் எழுதினால் இந்தித் திணிப்பு என்று கூறும் திமுக, தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான பொருட்களை பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்வதும், அந்தப் பொருட்களின் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டு இருப்பதும் எந்த வகையில் நியாயம்? இந்தித் திணிப்பை அரசே மேற்கொள்ளலாமா? அல்லது இந்தியை வரவேற்க திமுக முடிவு எடுத்துவிட்டதா?. தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்க தமிழ்நாட்டில் நிறுவனங்களே இல்லையா?. இது தமிழ் மொழியையும் தமிழர்களையும் அவமதிக்கும் செயல் இல்லையா?. எந்த அடிப்படையில் பிற மாநிலத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது?. தமிழ்நாட்டு நிறுவனங்கள் லாபம் அடையக்கூடாதா? பொருட்களுடன் துணிப்பை ஏன் வழங்கப்படவில்லை? இவற்றிற்கான பணம்  கொடுக்கப்பட்டுவிட்டதா? கொடுக்கப்பட்டுவிட்டது என்றால் எவ்வளவு கொடுக்கப்பட்டது? மீதி எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும்?என்றெல்லாம் நான் கேட்கவில்லை, தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






மேலும், அந்த அறிக்கையில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் தொடர்பாக பல விமர்சனங்களை வைத்த ஓபிஎஸ், முதலமைச்சர் தலையிட்டு இந்த திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுகொண்டுடார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண