அய்யா வழி சமயத்தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் மீது மண்டைக்காடு போலீசார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீ விபத்து நடந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த அய்யா வழி சமயத் தலைவர் பாலபிரஜாபதி அடிகளார், 'தேவபிரசன்னம் பார்க்காமல் தமிழ் பாரம்பரியம் அடிப்படையில் கோவிலை புனரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். இதையடுத்து, மதநம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக சிவகுமார் என்பவர் போலீசில் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் பாலபிரஜாபதி அடிகளார் மீது மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.



 

இந்த வழக்கை ரத்து செய்யுமாறு அவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுவை விசாரித்த  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மனுதாரர் இந்து மதத்தலைவர்களில் ஒருவர். அவர் தமிழ் பாரம்பரியத்தின் அடிப்படையில் ஒரு கோவிலை புனரமைக்கலாம் என கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது. அரசியலமைப்புச்சட்டம் வழங்கி உள்ள கருத்துரிமை அடிப்படையில் மனுதாரர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது" என  உத்தரவிட்டார்.







 



நாரணபுரம் கிராமத்தில் மறுகால் ஓடையை மறித்து அமைத்த தார்ச்சாலையை அகற்ற உத்தரவிட கோரிய வழக்கில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

 

தென்காசி மாவட்டம் தாரகாபுரத்தைச்சேர்ந்த மணிகண்டன், மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், வாசுதேவநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட நாரணபுரம் கிராமத்தில் மறுகால் ஓடை மற்றும் நீர் பிடிப்பு பகுதி உள்ளது. இந்த மறுகால் ஓடைத்தண்ணீர், சின்னப்பாறைக்குளம், பெரியபாறைக்குளம் ஆகியவற்றிற்கு செல்லும். அங்கிருந்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் இந்த மறுகால் ஓடைப்பகுதியை மண்ணால் மெத்தி, தார்ச்சாலை அமைத்து உள்ளனர். இந்த ஓடை ஆவணங்களை மறைத்து தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.

 

இந்த சாலையை அகற்றி, ஓடையில் தண்ணீர் செல்ல வழிவகை செய்யுமாறு அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே எனது மனுவின் அடிப்படையில் ஓடையை மறித்து அமைத்த தார்ச்சாலையை அகற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு இந்த மனு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.