Petrol Diesel LPG: மத்திய அரசின் அறிவிப்புகளை தொடர்ந்து சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டரின் விலை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
மத்திய அரசு அறிவிப்பு:
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகளால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்து வருகிறது. இதனால், இந்தியாவிலும் எரிபொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர் எதிர்மாறாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 2 ரூபாய் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் கலக்கத்தில் ஆழ்ந்தனர். இருப்பினும் கலால் வரி உயர்வால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம், அதனை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளும் என விளக்கம் அளித்தது. ஆனால், அதைதொடர்ந்து அத்தியாவசிய பயன்பாடான வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டரின் விலையையும் 50 ரூபாய் அதிகரித்து மத்திய அரசு அதிர்ச்சி கொடுத்தது.
இன்றைய பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை:
மத்திய அரசின் அறிவிப்பின்படியான விலை உயர்புகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 93 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 92 ரூபாய் 52 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுகொள்வதால், விலை உயர்வு மக்களை நேரடியாக பாதிக்காமல் பழைய விலையிலேயே தொடர்கிறது. அதேநேரம், சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்து, மானிய விலையில் சிலிண்டர் பெறுபவர்களுக்கு 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், உஜ்வாலா திட்டத்தின் மூலம் சிலிண்டர் பெறுபவர்களுக்கு 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசின் மீது குற்றச்சாட்டுகள்:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால், எரிபொருட்களின் விலை இந்தியாவிலும் குறையும், அதனால் பொதுமக்களிடம் கணிசமான அளவில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கலால் வரி உயர்வு என்ற பெயரில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை மத்திய அரசு பறித்துவிட்டதாக பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கச்சா எண்ணெய் விலைக் குறைப்பால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்ப்பை, வரியை உயர்த்தி விலைக் குறைப்பு தடுக்கப்பட்டு விட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை 4.5% குறைந்து, ஒரு பீப்பாய் 59.16 டாலருக்கு விற்கப்படுகிறது. ஃப்ரண்ட் கச்சா எண்ணெயும் 4.39 சதவீதம் விலை குறைந்து, 62.7 டாலருக்கு விற்பனை ஆகிறது.