TN Election 2025: தமிழ்நாட்டில் இன்றளவும் மாநில தொடர்ந்து தீவிரமாக இருப்பதன் விளைவாகவே, தேசிய கட்சிகள் வலுவான நிலையை எட்டமுடியாமல் தவித்து வருகின்றன.
தமிழ்நாடு தேர்தல் களம்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே, இனி ஒவ்வொரு நாளையும் மிகவும் முக்கியமானதாக கருதி, அரசியல் கட்சிகள் தங்களது பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக, மாநில பிரச்னைகள் மற்றும் தேவைகளை முன்னிலைப்படுத்தியே, ஆளுங்கட்சி தொடங்கி எதிக்கட்சிகள் வரை தங்களது தேர்தல் பணிகளுக்கான திட்டங்களை முன்னெடுக்கின்றன. மாநிலத்தின் நாலாபுறமும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை முழு வீச்சில் தொடங்கியுள்ளதால், தமிழ்நாட்டில் தற்போதே தேர்தல் அனல் வீச தொடங்கியுள்ளது.
”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்
மாநில அரசியல், மாநில பிரச்னைகள், மாநில தேவைகள் மற்றும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கே, நாங்கள் முன்னுரிமை கொடுப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக ”தமிழ்நாடு” என்ற பெயரை ஒவ்வொரு கட்சியும் ப்ராண்டாக பயன்படுத்தி வருகின்றன. உதாரணமாக ஆளுங்கட்சியான ஸ்டாலின் தலைமையிலான திமுக ”ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சியான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக “மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அரசுக்கு எதிராக தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. பாமக தலைவர் அன்புமணி தமிழக மக்களின் “உரிமை மீட்க.. தலைமுறை காக்க” என்ற பெயரில் நடைபயணம் தொடங்கியுள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் “வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை நடைமுறையை தொடங்கியுள்ளது.
மாநிலத்திற்கே முக்கியத்துவம்:
தேசிய உணர்வு மிகுந்து இருந்தாலும், மாநில தேவைகளுக்கே தமிழக அரசியல் கட்சிகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. குறிப்பாக இனம், மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை உயர்த்தி பிடிப்பதோடு, ஆட்சிகள் மாறினாலும் வளர்ச்சிக்கான திட்டங்களை மட்டும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுத்துகின்றன. மாநிலத்திற்கான கொள்கைகள் மற்றும் உரிமைகளை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுப்பதும் இல்லை. அதை தமிழக மக்கள் அனுமதிப்பதும் இல்லை. இதன் காரணமாகவே கல்வி, மருத்துவம், தொழில்துறை, வேலைவாய்ப்பு மற்றும் தனிநபர் வருவாய் உள்ளிட்டவற்றில் நாட்டின் பல மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.
தத்தளிக்கும் தேசிய கட்சிகள்:
அண்டை மாநிலங்களான கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடாகவில் தற்போது கூட தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. தங்களது உரிமைகளுக்கு குரல் கொடுக்க ஒரு வலுவான மாநில கட்சி இல்லாததன் விளைவாகவே, தேசிய கட்சிகளின் நீரோட்டத்தில் தற்போது வரை அந்த மாநிலங்கள் பயணித்து வருகின்றன. ஆனால், 1967ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்கியதற்கு பிறகு, தற்போது வரை எந்தவொரு தேசிய கட்சியாலும் இங்கு வலுவாக காலூன்ற முடியவில்லை. ”வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்ற கருத்தை தற்போதைய சூழலும் வலுவூட்டுவதே இதற்கு காரணமாக உள்ளது.
காங்கிரஸோ, பாஜகவோ எந்த கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ்நாட்டை இரண்டாம் தாரமாகவே கருதுவதாகவும், அவர்களது மொழி மற்றும் கலாச்சாரத்தை நம் மீது திணிப்பதாகவும் தமிழக மக்கள் வலுவாக நம்புகின்றனர். நதிநீர் பிரச்னை போன்றவற்றில் வாக்கு வங்கிக்காக தேசிய கட்சிகள் மாநிலங்களுக்கு ஏற்ப மாற்றி மாற்றி பேசி வருவதும் அவர்கள் மீதான நம்பகத்தன்மையை குறைப்பதாக கருதப்படுகிறது. வடமாநிலங்களை காட்டிலும் கல்வி அறிவும், பகுத்தறிவும் மேலோங்கி இருப்பதால், மதம் போன்ற பிரிவினைவாத காரணிகளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளாததும் தேசிய கட்சிகள் இங்கு தள்ளாடுவதற்கு காரணமாக உள்ளது.